(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு மாசிலாமணீஸ்ஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), சேந்தனார் (திருவிசைப்பா)
தலக் குறிப்புகள்:
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவாவடுதுறை. தேவார மூவரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சேந்தனாரால் பாடல் பெற்று திருவிசைப்பா தலமாகவும் திகழ்கின்றது.
ஞானசம்பந்தப் பெருமானுக்கு இறைவர் பொற்கிழி அருளிய தலம். திருமூலர் 3000 ஆண்டுகள் சிவ யோகத்திலிருந்து, ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம் 3000 திருப்பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தை அருளிச் செய்த ஆலய வளாகம். மேலும் எண்ணிலடங்கா சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது ஆவடுதுறை.
ஆலய கோபுர வாயிலில் தனிச்சன்னிதிகளில் விநாயகப் பெருமானையும், வேலாயுதக் கடவுளையும் தரிசித்து வணங்கியவாறு உள்ளே செல்கின்றோம். கடல் போல் பரந்து விரிந்த வளாகம். பிரமாண்டமான திருமேனியோடு திருநந்திதேவர்.
சிவபரம்பொருள் மாசிலாமணீஸ்வரராகவும், இறைவி ஒப்பிலாமுலையம்மையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். மூலவருக்கு அருகிலுள்ள தனிச்சன்னிதியில் தியாகராஜப் பெருமான் திருக்காட்சி தருகின்றார்.
உட்பிரகாரச் சுற்றில், மூலக்கருவறையின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான
சொற்பிழைவராமல் உனைக் கனக்கத் துதித்து
நிற்பதுவராத பவக்கடத்தில் சுழற்றி
சுக்கிலவதார வழிக்கிணக்கிக் களித்து ...... விலைமாதர்
துப்பிறையதான இதழ்க்கனிக்குக் கருத்தை
வைத்து மயலாகி மனத்தை விட்டுக் கடுத்த
துற்சன மகாதகரைப் புவிக்குள் தழைத்த ...... நிதிமேவு
கற்பகஇராசன் எனப்படைக்குப் பெருத்த
அர்ச்சுன நராதி எனக்கவிக்குள் பதித்து
கற்றறி வினாவை எடுத்தடுத்துப் படித்து ...... மிகையாகக்
கத்திடு மெயாக வலிக்கலிப்பைத் தொலைத்து
கைப்பொருளிலாமை எனைக் கலக்கப்படுத்து
கற்பனை விடாமல் அலைத்திருக்கச் சலிக்க ...... விடலாமோ
எற்பணிஅராவை மிதித்து வெட்டித் துவைத்து
பற்றிய கராவை இழுத்துரக்கக் கிழித்து
எட்கரி படாமல் இதத்த புத்திக்கதிக்கு ...... நிலையோதி
எத்திய பசாசின் முலைக்குடத்தைக் குடித்து
முற்றுயிரிலாமல் அடக்கிவிட்டுச் !சிரித்த
யிற்கணைஇராமர் சுகித்திருக்கச் சினத்த ...... திறல்வீரா
வெற்பென மதாணி நிறுத்துருக்கிச் சமைத்து
வர்க்க மணியாக வடித்திருத்தித் தகட்டின்
மெய்க் குலமதாக மலைக்க முத்தைப் பதித்து ...... வெகுகோடி
விட்கதிரதாக நிகர்த்தொளிக்கச் சிவத்த
ரத்தின படாகம் மயிற்பரிக்குத் தரித்து
மிக்க திருவாவடு நற்றுறைக்குள் செழித்த ...... பெருமாளே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment