Sunday, November 25, 2018

பெரிய மடம்:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: மகாமகக் திருக்குளத்தின் வடதிசையில் அமைந்துள்ள வீர சைவ பெரிய மடம் மற்றும் ஸ்ரீவீரபத்திரர் திருக்கோயில். 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

கும்பகோண நகரில், பிரசித்தி பெற்ற மகாமகத் திருக்குளத்தின் வடதிசையில் அமைந்துள்ளது வீர சைவ பெரிய மடம். ஒரு திருமடம் மற்றும் அதனையொட்டிய ஸ்ரீவீரபத்திரர் திருக்கோயில் ஆகிய இரண்டும் சேர்ந்தே பெரியமடம் என்று வழங்கப் பெற்று வருகின்றது. சிறு ஆலயம், அருணகிரியார் காலத்திலும் அதற்கு முன்பாகவும் இத்தலம் மிகவும் மாட்சி பொருத்தியதாக விளங்கியிருக்கக் கூடும் என்று யூகிக்க முடிகின்றது. மூலக் கருவறையில் சிவஅம்சமாய் ஸ்ரீவீரபத்திரர் ஆச்சரியத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார்.

இவ்வாலயத்தில் நமது திருப்புகழ் தெய்வம், சிறிய திருமேனியராய், பின்புறம் மயில் விளங்க, நின்ற திருக்கோலத்தில் பாலமுருகன் எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளி இருக்கின்றான், மிகவும் அருகில் சென்று உற்று நோக்கினால், தீர்க்கமான புன்னகையோடு கூடிய கந்தக் கடவுளின் திருமுக தரிசனம் பெற்றுச் சிவானந்தம் எய்தலாம், அன்னை ஸ்ரீபத்திரகாளி இன்ன பிற திருச்சன்னிதிகளும் உண்டு. ஆண்டுதோறும் மாசி மகமன்று மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி கண்டருளும் ஸ்ரீஆதி கும்பேசுவரப் பரம்பொருள் இத்திருக்கோயிலுக்கு எழுந்தருளிச் செல்வது இன்றும் கைக்கொள்ளப் பெற்று வரும் மரபு.

அருணகிரியார் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், தன்னை 'அருணகிரிநாதா' என்று ஆறுமுக தெய்வம் அழைத்தருளிய நிகழ்வினை இத்திருப்பாடலில் பதிவு செய்தருளி இருப்பது நம்மை நெகிழ்வுறச் செய்கின்றது.

(Google Maps: Sri Veera Shaiva Periya Madam, Head Post Office Rd, near maha magm kolam, Anna Nagar, Kumbakonam, Tamil Nadu 612001, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதனன தானதன தத்தனா தாத்த
     தனதனன தானதன தத்தனா தாத்த
          தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான

கலகவிழி மாமகளிர் கைக்குளேயாய்ப் பொய்
     களவுமத நூல்பல படித்தவா வேட்கை
          கனதனமும் மார்புமுறல் இச்சையால்ஆர்த்து ...... கழுநீரார்

கமழ்நறை சவாது புழு கைத்துழாய் வார்த்து
     நிலஅரசு நாடறிய கட்டில் போட்டார்ச் செய்
          கருமம்அறியாது சிறுபுத்தியால் வாழ்க்கை ...... கருதாதே

தலம்அடைசு சாளர முகப்பிலே காத்து
     நிறைபவுசு வாழ்வரசு சத்யமே !வாய்த்த
          தெனஉருகி ஓடியொரு சற்றுளே வார்த்தை ...... தடுமாறித்

தழுவி அநுராகமும் விளைத்து மாயாக்கை
     தனையும்அரு நாளையும் அவத்திலே !போக்கு
          தலை அறிவிலேனை நெறிநிற்க நீ தீக்ஷை ...... தரவேணும்

அலகில் தமிழால்உயர் சமர்த்தனே போற்றி
     அருணைநகர் கோபுரம் இருப்பனே போற்றி
          அடல்மயில் நடாவிய ப்ரியத்தனே போற்றி ...... அவதான

அறுமுக சுவாமிஎனும் அத்தனே போற்றி
     அகிலதலம் ஓடிவரு நிர்த்தனே போற்றி
          அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி ...... அசுரேசர்

பெலமடிய வேல்விடு கரத்தனே போற்றி
     கரதல கபாலிகுரு வித்தனே போற்றி
          பெரியகுற மாதணை புயத்தனே போற்றி ......பெருவாழ்வாம்

பிரமன்அறியா விரத தக்ஷிணா மூர்த்தி
     பரசமய கோளிரி தவத்தினால் வாய்த்த
          பெரியமடம் மேவிய சுகத்தனே யோக்யர் ...... பெருமாளே.

(2019 டிசம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment