(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருவாரூரிலுருந்து 27 கி.மீ தொலைவிலும், வலிவலத்திலிருந்து 5 1/2 கி.மீ தொலைவிலும், திருக்குவளையிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள திருத்தலம். எட்டி மரங்கள் சூழ்ந்திருந்த பகுதியாதலால் எட்டிக்குடி, அருணகிரியாரும் இத்தலத்திற்கான திருப்பாடல்களில் எட்டிக்குடி என்றே குறிக்கின்றார். தற்கால வழக்கில் (சிறிது மருவி) எட்டுக்குடி என்று வழங்கப் பெற்று வருகின்றது.
சிக்கல்; எட்டுக்குடி; எண்கண் ஆகிய மூன்று தலங்களிலுள்ள மூலத் திருமேனிகளும் ஒரே சிற்பியால் அமைக்கப் பெற்றவை என்பது பிரசித்தமான வரலாற்றுக் குறிப்பு.
ஆலயத்திற்கு முன்பாக பெரியதொரு திருக்குளம் அழகுற அமையப் பெற்றுள்ளது. ஓரளவு விசாலமான ஆலய வளாகம். வேலாயுதக் கடவுள் திருத்தமான ஆறு திருமுகங்களோடும், பன்னிரு திருக்கரங்களோடும், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், ஆனந்தத் திருக்காட்சி.
-
ஆறு திருமுகங்களிலும் முழுவதுமாய் விபூதிக் காப்பு சாத்தப் பெற்றிருந்ததால், மூலத் திருமேனியின் திருமுக வடிவழகை உள்ளவாறு தரிசிக்க இயலவில்லையே எனும் ஏக்கத்துடனேயே வேலவனைத் தரிசித்து வணங்கி போற்றி மகிழ்ந்தோம்.
அருணகிரிப் பெருமானார் இம்மூர்த்தியை 4 திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார். 3 திருப்பாடல்களில் எட்டிக்குடி என்றும், ஒரு திருப்பாடலில் காஞ்சிரங்குடி என்றும் இத்தலப் பெயரினைக் குறிக்கின்றார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
உரமுற்றிரு செப்பென வட்டமும்!ஒத்
திளகிப் புளகித் ...... திடமாயே
உடை சுற்றுமிடைச் சுமையொக்க!அடுத்
தமிதக் கெறுவத்துடன் வீறு
தரமொத்துபயக் களபத் !தளமிக்
க வனத் தருணத் ...... தனமீதே
சருவிச் சருவித் தழுவித் தழுவித்
தவமற்க விடுத்துழல்வேனோ
அரிபுத்திர சித்தச !அக்கடவுட்
கருமைத் திரு மைத்துனவேளே
அடல் குக்குடநற் கொடிகட்டி!அனர்த்
தசுரப் படையைப் ...... பொருவோனே
பரிவுற்றவருக்கருள் வைத்தருள்!வித்
தக முத்தமிழைப் ...... பகர்வோனே
பழனத்தொளிர் முத்தணி எட்டிகுடிப்
பதியில் குமரப் ...... பெருமாளே
திருப்பாடல் 2:
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
ஓங்கும் ஐம்புலனோட நினைத்தின்பயர்வேனை
ஓம்பெறும் ப்ரணவாதி உரைத்தெந்தனை ஆள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்புள் தாவி
வாங்கி நின்றன ஏவில்உகைக்குங் ...... குமரேசா
மூங்கிலம்புய வாசமணக் குஞ்சரி மானும்
மூண்டபைங் குறமாது மணக்கும் ...... திருமார்பா
காங்கையங்கறு பாசில் மனத்தன்பர்கள் வாழ்வே
காஞ்சிரங்குடி ஆறுமுகத்தெம் ...... பெருமாளே
திருப்பாடல் 3:
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த ...... தனதானா
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
கயலொத்த மலரொத்த ...... விழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
கதிர்முத்து முலை தைக்க ...... அகலாதே
மிடலுற்ற கலவிக்குள் உளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி
மெலிவுற்ற தமியற்குன் இருபத்ம சரணத்தை
மிக நட்பொடருள்தற்கு ...... வருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்துடைய துட்டன் உயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தரு சக்ரதரனுக்கு ...... மருகோனே
திடமுற்ற கனகப் பொதுவில் நட்புடனடித்த
சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே
செழுநத்துமிழு முத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழ் எட்டிகுடியுற்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தத்தன தத்தன தானா தானா
தத்தன தத்தன தானா தானா
தத்தன தத்தன தானா தானா ...... தனதான
மைக் குழலொத்தவை நீலோ மாலோ
அக்கண் இணைக்கிணை சேலோ வேலோ
மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ
வத்திர மெய்ச்சசி தானோ நாணா
குத்து முலைக்கிளநீரோ மேரோ
வைப்பதிடைக்கிணை நூலோ மேலோ ...... எனமாதர்
தக்கஉறுப்பினுள் மாலே மேலாய்
லச்சையறப் புணர் வாதேகாதே
சைச்சை எனத்திரி நாயேன் ஓயாதலையாதே
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
தற்சமையத்த கலாவேல் நாதா
தத்து மயிற்பரி மீதே நீதான் ...... வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலா
சித்தசன் மைத்துன வேளே தோளார்
மொய்த்த மணத்த துழாயோன் மாயோன் ...... மருகோனே
முத்தமிழ் வித்வ விநோதா கீதா
மற்றவரொப்பில ரூபா தீபா
முத்தி கொடுத்தடியார் மேல் மாமால் ...... முருகோனே
இக்கு நிரைத்த விராலுார் சேலூர்
செய்ப் பழநிப் பதியூரா ஆரூர்
மிக்கஇடைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா
எச்சுருதிக்குளும் நீயே தாயே
சுத்த விறல் திறல் வீரா தீரா
எட்டிகுடிப் பதி வேலா மேலோர் ...... பெருமாளே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment