Sunday, November 25, 2018

திருவிடைமருதூர்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: தஞ்சாவூர்

திருக்கோயில்: அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), கருவூர்த்தேவர் (திருவிசைப்பா)


தலக் குறிப்புகள்

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Sri Mahalingaswamy Temple Thiruvidaimaruthur,Padal Petra Temple, SH 64, Thiruvidaimaruthur, Tamil Nadu 612104, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா ...... தனதன தனதான

அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
     ஆகமாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி அவருடைய
     ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினில் அருமையிட மொளுமொளென உடல்வளர
     ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்

அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
     ஆவியாயஓர் தேவிமாருமாய்
விழுசுவரை அரிவையர்கள் படுகுழியை நிலைமையென
     வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடும்இக பிதிரவிட மனமிறுகி
     ஆசையாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே

வெறுமிடியன் ஒருதவசி அமுதுபடை எனுமளவில்
     மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி அவர்களொடு
     சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
     வீணியார்சொலே மேலதாயிடா ...... விதிதனை நினையாதே

மினுகுமினுகெனும்உடலம் அறமுறுகி நெகிழ்வுறவும்
     வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுளதெனும்அவரை விடும்விழலை அதனின்!வரு
     வார்கள் போகுவார் காணுமோ எனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
     மேளமே சொலாய் ஆளி வாயராய் ...... மிடையுற வருநாளில்

வறுமைகளும் முடுகிவர உறுபொருளும் நழுவசில
     வாதமூது காமாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
     பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
     வாடி ஊனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்

மறுகமனை உறுமவர்கள் நணுகுநணுகெனும் அளவில்
     மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனில் இரதமொடு குதிரைவர நெடியசுடு
     காடு வாஎனா வீடு போஎனா
வலதழிய விரகழிய உரைகுழறி விழிசொருகி
     வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச

இறுதியதொடறுதியென உறவின்முறை கதறியழ
     ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை எனதடிமை எனுமறிவு சிறிதுமற
     ஈ மொலேல்எனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
     ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனில் இடும்வாழ்வே

இணையடிகள் பரவும்உனதடியவர்கள் பெறுவதுவும்
     ஏசிடார்களோ பாச நாசனே
இருவினை முமலமுமற இறவியொடு பிறவியற
     ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
     ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.

திருப்பாடல் 2:
தனன தனதனன தான தானதன
     தனன தனதனன தான தானதன
          தனன தனதனன தான தானதன ...... தந்ததான

இலகு குழைகிழிய ஊடு போயுலவி
     அடர வருமதன நூலளாவிஎதிர் 
          இளைஞர் உயிர்கவர ஆசை நேர்வலை பொதிந்தநீலம்

இனிமை கரைபுரள வாகுலாவு சரி
     நெறிவு கலகலென வாசம் வீசுகுழல் 
          இருளின் முகநிலவு கூர மாணுடை அகன்றுபோக

மலையும் இதழ்பருகி வேடை தீரவுடல் 
     இறுக இறுகிஅநுராக போகமிக
          வளரும் இளகுதன பார மீதினில் முயங்குவேனை

மதுர கவியடைவு பாடி வீடறிவு
     முதிர அரியதமிழ் ஓசையாகஒளி
          வசனம் உடையவழிபாடு சேரும்அருள் ...... தந்திடாதோ

கலக அசுரர்கிளை மாள மேருகிரி
     தவிடு படவுதிர ஓல வாரியலை
          கதற வரியரவம் வாய்விடாபசி தணிந்தபோகக்

கலப மயிலின்மிசை ஏறி வேதநெறி
     பரவும் அமரர் குடியேற நாளும்விளை
          கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே

அலகையுடன் நடமதாடு தாதைசெவி
     நிறைய மவுனஉரையாடு நீபஎழில்
          அடவி தனிலுறையும் வேடர் பேதையை மணந்த கோவே

அமணர் கழுவில் விளையாட வாதுபடை
     கருது குமரகுரு நாத நீதி!உள
          தருளும் இடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 3:
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான

படியைஅளவிடுநெடிய கொண்டலும் சண்டனும்
     தமர சதுமறைஅமரர் சங்கமும் சம்புவும்
          பரவரிய நிருபன்விரகன்சுடும் சம்பனன் ...... செம்பொன் மேனிப்

பரமனெழில் புனையும்அரவங்களும் கங்கையும் 
     திருவளரும் முளரியொடு திங்களும் கொன்றையும்
          பரியகுமிழ் அறுகுகன தும்பையும் செம்பையும் ...... துன்றுமூலச்

சடைமுடியில் அணியுநல சங்கரன் கும்பிடும் 
     குமரன்அறுமுகவன் மதுரம்தரும் செஞ்சொலன்
          சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தன்என்றுய்ந்துபாடித்

தணியவொலி புகலும்விதம் ஒன்றிலும் சென்றிலன்
     பகிரவொரு தினையளவு பண்பு கொண்டண்டிலன்
          தவநெறியில் ஒழுகிவழி பண்படும் கங்கணம் ...... சிந்தியாதோ

கடுகுபொடி தவிடுபட மந்திரம் தந்திரம்
     பயிலவரு நிருதர்உடலம் பிளந்தம்பரம் 
          கதறிவெகு குருதிநதி பொங்கிடும் சம்ப்ரமம் ...... கண்டுசேரக்

கழுகுநரி கொடிகருடன் அங்கெழுந்தெங்கு !நின்
     றலகைபல திமிலைகொடு தந்தனம் தந்தனம் 
          கருதியிசை பொசியுநசை கண்டுகண்டின்புறும் ...... துங்கவேலா

அடல்புனையும் இடைமருதில் வந்திணங்கும்குணம்
     பெரியகுரு பரகுமர சிந்துரம் !சென்றடங்
          கடவி தனில் உறைகுமரி சந்திலங்கும்தனம்  ...... தங்குமார்பா

அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயம் 
     கருணைபொழி வனகழலில் அந்தமும் !தம்பமென்
          றழகுபெற நெறிவருடி அண்டரும் தொண்டுறும் ...... தம்பிரானே.

திருப்பாடல் 4:
தனதனதன தான தானன தனதனதன தான தானன
     தனதனதன தான தானன ...... தந்ததான

புழுகொடுபனி நீர்சவாதுடன் இருகரமிகு மார்பி லேபன
     புளகிதஅபிராம பூஷித ...... கொங்கை யானை

பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி
     பொருவனகணை போல்விலோசன ...... வந்தியாலே

மெழுகெனஉருகாஅனார் தமது இதய கலகமோடு மோகன
     வெகுவித பரிதாப வாதனை ...... கொண்டுநாயேன்

மிடைபடுமல மாயையால்மிக கலவிய அறிவேக சாமிநின்
     விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய்

எழுகிரி நிலையோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி
     இடர்கெட அசுரேசர் சேனை முறிந்துபோக

இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள் ககராசன் மேலிட
     ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச்

செழுமதகரி நீல கோமள அபிநவ மயிலேறு சேவக
     செயசெய முருகா குகாவளர் ...... கந்தவேளே

திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு
     திருவிடைமருதூரில் மேவிய ...... தம்பிரானே.

No comments:

Post a Comment