(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி தென்கரை)
மாவட்டம்: திருச்சி
திருக்கோயில்: அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்).
தலக் குறிப்புகள்:
திருச்சியிலிருந்து 8 கி.மீ தூரத்தில், படிகளேறி உச்சிப் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்லும் வழியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
(Google Maps: Thaayumaana Swami Temple,Padal Petra Temple, 47, Chinna Kadai St, Teppakulam, Tiruchirappalli, Tamil Nadu 620002, India)
(Google Maps: Thaayumaana Swami Temple,Padal Petra Temple, 47, Chinna Kadai St, Teppakulam, Tiruchirappalli, Tamil Nadu 620002, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 15.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தந்த தாத்தன தத்தத் தானன
தந்த தாத்தன தத்தத் தானன
தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான
அங்கை நீட்டியழைத்துப் பாரிய
கொங்கை காட்டி மறைத்துச் சீரிய
அன்பு போல்பொய் நடித்துக் காசளவுறவாடி
அம்பு தோற்ற கணிட்டுத் தோதக
இன்ப சாஸ்த்ரம் உரைத்துக் கோகிலம்
அன்றில் போல் குரலிட்டுக் கூரிய ...... நகரேகை
பங்கமாக்கி அலைத்துத் தாடனை
கொண்டு வேட்கை எழுப்பிக் காமுகர்
பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் இயல்பாகப்
பண்டிராப்பகல் சுற்றுச் சூளைகள்
தங்கள் மேல் ப்ரமை விட்டுப் பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே
எங்குமாய்க் குறைவற்றுச் சேதன
அங்கமாய்ப் பரிசுத்தத்தோர் பெறும்
இன்பமாய்ப் புகழ் முப்பத்தாறினின் ...... முடிவேறாய்
இந்த்ர கோட்டி மயக்கத் தான்மிக
மந்த்ர மூர்த்தம்எடுத்துத் தாமதம்
இன்றி வாழ்த்திய சொர்க்கக் காவல ...... வயலூரா
செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
வென்று தோல்பறை கொட்டக் கூளிகள்
தின்று கூத்து நடிக்கத் தோகையில் ...... வரும்வீரா
செம்பொனார் திகழ் சித்ரக் கோபுரம்
மஞ்சிராப்பகல் மெத்தச் சூழ்தரு
தென் சிராப்பள்ளி வெற்பில் தேவர்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன ...... தனதான
அந்தோ மனமே நமதாக்கையை
நம்பாதெ இதாகித சூத்திரம்
அம்போருகன் ஆடிய பூட்டிது ...... இனிமேல் நாம்
அஞ்சாதமையா கிரி ஆக்கையை
பஞ்சாடிய வேலவனார்க்கியல்
அங்காகுவம் வா இனிதாக்கையை ...... ஒழியாமல்
வந்தோம்இதுவே கதியாட்சியும்
இந்தா மயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய ...... சிவநீறும்
வந்தே வெகுவா நமை ஆட்கொள்!உ
வந்தார் மதம்ஏதினி மேற்கொள
மைந்தா குமராஎனும் ஆர்ப்புய ...... மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை ஆர்த்தெழ ...... மறையோதச்
செங்காடெனவே வரு மூர்க்கரை
சங்கார சிகாமணி வேற்கொடு
செண்டாடி மகாமயில் மேற்கொளு ...... முருகோனே
இந்தோடிதழ் நாக மகாக்கடல்
கங்காள மினார் சடை சூட்டிய
என்தாதை சதாசிவ கோத்திரன் அருள்பாலா
எண்கூடருளால் நெளவி நோக்கியை
நன்பூமண மேவி சிராப்பளி
என்பார் மனமேதினி நோக்கிய ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன ...... தனதான
அரிவையர் நெஞ்சுருகாப் புணர்
தரு விரகங்களினால் !பெரி
தவசம் விளைந்து விடாய்த்தடர் ...... முலைமேல்!வீழ்ந்
தகிலொடு சந்தன சேற்றினில்
முழுகிஎழுந்தெதிர் கூப்பு கை
அடியில் நகம்பிறை போற்பட ...... விளையாடிப்
பரிமளம் விஞ்சிய பூக்குழல்
சரிய மருங்குடை போய்ச்சில
பறவைகளின் குரலாய்க் கயல் ...... விழிசோரப்
பனிமுகமும் குறு வேர்ப்பெழ
இதழ்அமுதுண்டிரவாய்ப் பகல்
பகடியிடும் படி தூர்த்தனை ...... விடலாமோ
சரியையுடன் க்ரியை போற்றிய
பரமபதம் பெறுவார்க்கருள்
தருகணன் ரங்க புரோச்சிதன் ...... மருகோனே
சயிலமெறிந்த கைவேல் கொடு
மயிலினில் வந்தெனை ஆட்கொளல்
சகமறியும்படி காட்டிய ...... குருநாதா
திரிபுவனம் தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில் விளங்கு சிராப்பளி ...... மலைமீதே
தெரிய இருந்த பராக்ரம
உருவளர் குன்றுடையார்க்கொரு
திலதமெனும்படி தோற்றிய ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தனதன தானான தானன தனதன தானான தானன
தனதன தானான தானன ...... தந்ததான
அழுதழுதாசார நேசமும் உடையவர் போலேபொய் சூழ்வுறும்
அசடிகள் மாலான காமுகர் ...... பொன் கொடா நாள்
அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள்
அறுதியில் காசாசை வேசைகள் ...... நஞ்சுதோயும்
விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரொடும்
விலையிடு மாமாய ரூபிகள் ...... பண்பிலாத
விரகிகள் வேதாளமோஎன முறையிடு கோமாள மூளிகள்
வினைசெயலாலே எனாவியும் உயங்கலாமோ
வழியினில் வாழ்ஞான போதக பரம சுவாமீ வரோதய
வயலியில் வேலாயுதா வரை ...... எங்குமானாய்
மதுரையின் மீதாலவாயினில் எதிர்அமணார் ஓரோரெணாயிரர்
மறிகழு மீதேற நீறு பரந்துலாவச்
செழியனும் ஆளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி
சிவசிவ மாதேவ காஎன ...... வந்துபாடும்
திருவுடையாய் தீதிலாதவர் உமையொரு பாலான மேனியர்
சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 5:
தனதன தந்தத் தனதன தந்தத்
தனதன தந்தத் ...... தனதான
இளையவர் நெஞ்சத் தளையம் எனும்!சிற்
றிடைகொடு வஞ்சிக் ...... கொடிபோல்வார்
இணையடி கும்பிட்டணிஅல்குல் !பம்பித்
திதழ் அமுதுந்துய்த்தணியாரக்
களப சுகந்தப் புளகித இன்பக்
கனதன கும்பத்திடை மூழ்கும்
கலவியை நிந்தித்திலகிய நின்பொற்
கழல்தொழும் அன்பைத் ...... தருவாயே
தளர்வறும் அன்பர்க்குளமெனும் மன்றில்
சதுமறை சந்தத்தொடுபாடத்
தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
தகுர்தியெனும் கொட்டுடனாடித்
தெளிவுற வந்துற்றொளிர் சிவன் அன்பில்
சிறுவ அலங்கல் ...... திருமார்பா
செழுமறை அஞ்சொல் பரிபுர சண்டத்
திரிசிர குன்றப் ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தனதன தத்தம் தனதன தத்தம்
தனதன தத்தம் ...... தனதான
பகலவன்ஒக்கும் கனவிய ரத்னம்
பவளவெண் முத்தம் ...... திரமாகப்
பயிலமுலைக் குன்றுடையவர் சுற்றம்
பரிவென வைக்கும் ...... பணஆசை
அகமகிழ் துட்டன் பகிடி மருள்!கொண்
டழியும் அவத்தன் ...... குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி !பெற்றுண்
டலைதல் ஒழித்தென்றருள்வாயே
சகலரு மெச்சும் பரிமள பத்மம்
தருண பதத் திண் ...... சுரலோகத்
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும்
தழுவ அணைக்கும் ...... திருமார்பா
செகதல மெச்சும் புகழ் வயலிக்கும்
திகுதிகெனெப் பொங்கியஓசை
திமிலைதவில் துந்துமிகள் முழக்கும்
சிரகிரியிற்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 7:
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த ...... தனதான
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
ஒருவரொடு செங்கை ...... உறவாடி
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை
ஒருவரொடிரண்டும் ...... உரையாரை
மருவமிக அன்பு பெருக உளதென்று
மனநினையும் இந்த ...... மருள்தீர
வனசமென வண்டு தனதனன என்று
மருவு சரணங்கள் அருளாயோ
அரவமெதிர் கண்டு நடுநடுநடுங்க
அடலிடு ப்ரசண்ட ...... மயில்வீரா
அமரர் முதலன்பர் முநிவர்கள் வணங்கி
அடிதொழ விளங்கு ...... வயலூரா
திருவையொரு பங்கர் கமல மலர் வந்த
திசைமுகன் மகிழ்ந்த ...... பெருமானார்
திகுதகுதிஎன்று நடமிட முழங்கு
த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
குமுத வாய்க்கனி அமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே ...... அழகான
குழைகள் தாக்கிய விழிகளால் களி
கூரா வீறா தீரா மாலாய் அவரோடே
உமது தோள்களில் எமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் ...... எனவே !நின்
றுடை தொடாப் பணம் இடைபொறாத் தனம்
ஊடே வீழ்வேன் ஈடேறாதே ...... உழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதாவே மா ஞாதாவே தோகையிலேறீ
சயில நாட்டிறை வயலி நாட்டிறை
சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே
திமிர ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா ...... உமைபாலா
திரிசிராப்பளி மலையின் மேல்திகழ்
தேவே கோவே வேளே வானோர் ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன ...... தனதான
குவளை பூசல் விளைத்திடும் அங்கயல்
கடுவதாமெனும் மைக்கண் மடந்தையர்
குமுத வாயமுதத்தை நுகர்ந்திசை ...... பொருகாடை
குயில் புறாமயில் குக்கில் சுரும்பினம்
வனபதாயுதம் ஒக்குமெனும்படி
குரல்விடாஇரு பொற்குடமும் புளகிதமாகப்
பவள ரேகை படைத்ததரம் குறி
உற வியாள படத்தை அணைந்துகை
பரிச தாடன மெய்க் கரணங்களின் ...... மதனூலின்
படியிலே செய்துருக்கி முயங்கியெ
அவசமாய் வடபத்ர நெடுஞ்சுழி
படியு மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ
தவள ரூப சரச்சுதி இந்திரை
ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி ...... புவநேசை
சகல காரணி சத்தி பரம்பரி
இமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... எமதாயி
சிவை மநோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி அம்பிகை
த்ரிபுரை யாமளை அற்பொடு தந்தருள் ...... முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்நஅலங்க்ருத
திரிசிராமலை அப்பர் வணங்கிய ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
தத்த தானா தனாதன ...... தந்ததான
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
தற் ப்ரதாபா நமோநம ...... என்றுபாடும்
பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாதகில்
பச்சை பாடீர பூஷித ...... கொங்கை மேல்வீழ்
பட்டி மாடான நானுனை விட்டிராமே உலோகித
பத்ம சீர்பாத நீயினி ...... வந்து தாராய்
அத்ர தேவா உதாசுர ருக்ர சேனாபதீ சுசி
அர்க்ய சோமாசியா குரு ...... சம்ப்ரதாயா
அர்ச்சனாவாகனா வயலிக்குள் வாழ்நாயகா புய
அக்ஷ மாலாதரா குற ...... மங்கைகோவே
சித்ர கோலாகலா விரலக்ஷ்மி சாதா ரதா பல
திக்கு பாலா சிவாகம ...... தந்த்ர போதா
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
தெர்ப்பை ஆசார வேதியர் ...... தம்பிரானே.
திருப்பாடல் 11:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
புவனத்தொரு பொற்றொடி சிற்றுதரக்
கருவில் பவமுற்று விதிப்படியில்
புணர்துக்க சுகப் பயில்வுற்று மரித்திடில்ஆவி
புரியட்டகம் இட்டது !கட்டியிறுக்
கடி குத்தென அச்சம் விளைத்தலறப்
புரள்வித்து வருத்திமணற் சொரிவித்தனலூடே
தவனப்பட விட்டுயிர் !செக்கிலரைத்
தணி பற்களுதிர்த்தெரி செப்புருவைத்
தழுவப் பணி முட்களில் கட்டிஇசித்திட வாய்கண்
சலனப் படஎற்றி இறைச்சி!அறுத்
தயில்வித்து முரித்து நெரித்துளையத்
தளையிட்டு வருத்தும் யம ப்ரகரத் ...... துயர்தீராய்
பவனத்தை ஒடுக்கு மனக் கவலைப்
ப்ரமையற்றை வகைப் புலனில் கடிதில்
படரிச்சை ஒழித்த தவச் சரியைக் ...... க்ரியையோகர்
பரிபக்குவர் நிட்டை நிவிர்த்தியினில்
பரிசுத்தர் விரத்தர் கருத்ததனில்
பரவப்படு செய்ப் பதியில் பரமக் ...... குருநாதா
சிவன்உத்தமநித்த உருத்திரன் !முக்
கணநக்கன் மழுக்கரன் உக்ர ரணத்
த்ரிபுரத்தை எரித்தருள் சிற்குண நிற்குணண்ஆதி
செகவித்தன் நிசப் பொருள் சிற்பரன்!அற்
புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தடத்
த்ரிசிரப்புர வெற்புறை சற்குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 12:
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ...... தந்ததான
பொருளின் மேற்ப்ரிய காமாகாரிகள்
பரிவு போல்புணர் க்ரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
மிடியராக்கு பொலா மூதேவிகள்
புலையர் மாட்டும்அறாதே கூடிகள் ...... நெஞ்ச மாயம்
கருதொணாப்பல கோடா கோடிகள்
விரகினால்பலர் மேல்வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே ஓதிகள் ...... தங்களாசைக்
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள்
அவசமாக்கிடு பேய் நீரூணிகள்
கருணை நோக்கமிலா மா பாவிகள் இன்பமாமோ
குருகடாக்ஷ கலா வேதாகம
பரம வாக்கிய ஞானாசாரிய
குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக.. வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோ கோவென
மடிய நீட்டிய கூர்வேலாயுத
குருகு க்ஷேத்ர புரேசா வாசுகி ...... அஞ்ச மாறும்
செருபராக்ரம கேகே வாகன
சரவணோற்பவ மாலா லாளித
திரள் புயாத்திரி ஈராறாகிய ...... கந்தவேளே
சிகர தீர்க்கமகா சீ கோபுர
முக சடாக்கர சேணாடாக்ருத
திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 13:
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுககில் சந்து ...... பனிநீர்தோய்
புளகித கொங்கை இளக வடங்கள்
புரள மருங்கில் உடைசோர
இருள்வளர் கொண்டை சரியஇசைந்து
இணைதரு பங்க ...... அநுராகத்
திரிதலொழிந்து மனது கசிந்துன்
இணையடிஎன்று ...... புகழ்வேனோ
மருள்கொடு சென்று பரிவுடன்அன்று
மலையில் விளைந்த ...... தினைகாவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த ...... முருகோனே
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு
திரிசிர குன்றில் ...... முதனாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர் ...... பெருமாளே.
திருப்பாடல் 14:
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
தானத்தத் தான தானன ...... தந்ததான
வாசித்துக் காணொணாதது பூசித்துக் கூடொணாதது
வாய்விட்டுப் பேசொணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொணாதது நேசர்க்குப் பேரொணாதது
மாயைக்குச் சூழொணாதது ...... விந்துநாத
ஓசைக்குத் தூரமானது மாகத்துக் கீறதானது
லோகத்துக்காதிஆனது ...... கண்டுநாயேன்
யோகத்தைச் சேருமாறுமெய்ஞ் ஞானத்தைப் போதியாய்இனி
ஊனத்தைப் போடிடாது மயங்கலாமோ
ஆசைப்பட்டேனல் காவல்செய் வேடிச்சிக்காக மாமயல்
ஆகிப்பொற் பாதமேபணி ...... கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய் வயலூரத்தில் காளமோடடர்
ஆரத்தைப் பூண் மயூர துரங்கவீரா
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்தெட்டாத யோகிகள்
நாடிற்றுக் காணொணாதென ...... நின்ற நாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர் சிராமலை
நாதர்க்குச் சாமியே சுரர் ...... தம்பிரானே.
திருப்பாடல் 15:
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதான
வெருட்டி ஆட்கொளும் விடமிகள் புடைவையை
நெகிழ்த்தணாப்பிகள் படிறிகள் சடுதியில்
விருப்பமாக்கிகள் விரவிய திரவியம் இலரானால்
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு
பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படு முலையினும் நிலையினும் ...... எவரோடும்
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்
அவிழ்த்த பூக்கமழ் குழலினும் நிழலினும்
மதிக்கொணாத் தளர்இடையினும் நடையினும் அவமேயான்
மயக்கமாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணும்
தடத்து மோக்ஷமதருளிய பலமலர்
மணத்த வார்க்கழல் கனவிலும் நனவிலும் ...... மறவேனே
இருட்டிலாச் சுரர் உலகினில் இலகிய
சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடியற
இரக்ஷை வாய்த்தருள் முருக பனிருகர ...... குகவீரா
இலக்ஷுமீச்சுர பசுபதி குருபர
சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்
இலக்கரேய்ப் படை முகடெழு ககபதி ...... களிகூரத்
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட
எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும்
செருப்பராக்ரம நிதி சரவணபவ
சிவத்த பாற்கரன் இமகரன் வலம்வரு
திருச்சிராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே
No comments:
Post a Comment