Friday, December 28, 2018

திருவோத்தூர் (திருவத்திபுரம்):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவண்ணாமலை

திருக்கோயில்: அருள்மிகு பால குஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

சென்னையிலிருந்து 111 கி.மீ தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 83 கி.மீ தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து 34 கி.மீ தூரத்திலும், செய்யாறு வட்டத்தில் திருவோத்தூர் எனும் இத்தலம் அமைந்துள்ளது.தற்கால வழக்கில் திருவட்டூர் (திருவத்திபுரம்).விசாலமான திருக்கோயில், தனிப்பெரும் தெய்வமான சிவமூர்த்தி இத்தலத்தில் வேதபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி இருக்கின்றார், உமையன்னையின் திருநாமம் பாலகுஜாம்பிகை.
*
இத்தலத்தில் அடியவரொருவர் சிவமூர்த்திக்கு பனம்பழம் நிவேதிக்கும் கருத்துடன் பனைகளைப்  பயிரிட்டு வளர்த்து வருகின்றார். அவையனைத்தும் ஆண் பனைகளான தன்மையினால் காய்க்கவில்லை, அப்பகுதியிலுள்ள சமணர்கள் அவ்வப்பொழுது இது குறித்து அவ்வடியவரைப் பரிகசித்து வருகின்றனர். இவ்விடத்து வருகை புரியும் சம்பந்த மூர்த்தி இதனையறிந்து 'பூத்தேர்ந்தாயன' எனும் திருப்பதிகத்தினால் முக்கண் முதல்வரைப் போற்றி விண்ணப்பிக்க, ஆண் பனைகள் யாவும் பெண் பனைகளாகி அக்கணத்திலேயே குலைகளைக் காய்த்தளிக்கின்றன. இவ்வற்புத நிகழ்வினைக் கண்ணுறும் பெரும்பான்மையான சமணர்கள் சமணம் துறந்துத் திருநீறு பூசிச் சிவமூர்த்தியைப் போற்றி செய்கின்றனர்.

கொடிமரம் அருகிலுள்ள திருநந்திதேவர் சுவாமிக்கு எதிர்ப்புறம் நோக்கியுள்ளார். சிவசன்னிதியின் நீளமோ மிகஅதிகம், கொடிமரம் அருகிலுள்ள படிகளில் எறியபின்னர் முதலில் நர்த்தன கணபதியையும், ஆறுதிருமுகங்களளுடன் சிறிய திருமேனியராய் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள பாலமுருகனையும் தரிசிக்கலாம். பின் உச்சி கூப்பிய கரங்களுடன் சுவாமிக்கு அருகில் செல்கின்றோம். ஆஆ சிவபரம்பொருளின் திருக்கோலம் வார்த்தைகளால் விளக்கவொண்ணாத அற்புதத் தன்மை பொருந்தியது, ஏகாந்தமான ஆன்மாவினை உருக்கும் அனுபவத்தினை நல்கவல்லது.

சிவசன்னிதியின் பின்புறம், உட்பிரகாரத்தில், வலதுபுறம் நமது திருப்புகழ் தெய்வம், அதி அற்புத பிரமாண்டத்  திருக்கோலத்தில், திருத்தமான ஆறு திருமுகங்களுடன், இரு மருங்கிலும் தேவியரோடு, மயில் மீதமர்ந்து ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான், உட்பிரகாரச் சுற்றில் அணைத்து சன்னிதிகளும் ஆச்சரியமும் அழகும் பொருந்தியவை. ஆலய வளாகத்தில் இரு இடங்களில் சம்பந்த மூர்த்தி பனைமரத்தருகில் பதிகம் பாடும் திருக்கோலத்தில் எழுந்தருளி இருப்பது அழகு அழகு அழகு.

(Google Maps: Vedhapureeswarar Temple,Padal Petra Temple, SH 5, Thiruvatoor, Cheyyar, Thiruvatoor, Tiruvannamalai, Tamil Nadu 604407, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
     தனனாத் தானன தானம் ...... தனதான

தவர்வாள் தோமர சூலம் தரியாக் காதிய சூரும்
     தணியாச் சாகரமேழும் ...... கிரியேழும்

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும்!நீலந் 
     தரிகூத்தாடிய மாவும் ...... தினைகாவல்

துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட்டாளொரு தேனும்
     துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே

துணையாய்க் காவல்செய்வாய் என்றுணராப் பாவிகள் பாலும்
     தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ

பவமாய்த் தாணதுவாகும் பனைகாய்த்தே மணநாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படி வேதம்

படியாப் பாதகர் பாயன்றிஉடாப் பேதைகள் கேசம்
     பறி கோப்பாளிகள் யாரும் ...... கழுவேறச்

சிவமாய்த் தேனமுதூறும் திருவாக்கால்ஒளி சேர்வெண்
     திருநீற்றால் அமராடும் ...... சிறியோனே

செழுநீர்ச் சேய் நதியாரம் கொழியாக் கோமளம் வீசும்
     திருவோத்தூர் தனில் மேவும் ...... பெருமாளே.


(2019 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)



1 comment:

  1. அருமையான பதிவு நன்றிக்ள்

    ReplyDelete