Thursday, December 27, 2018

குமரக் கோட்டம்

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம்

திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

காஞ்சிபுரத்தின் பிரதானப் பகுதியில், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கும் காமாட்சியன்னை ஆலயத்திற்கும் நடுவில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது குமரக்கோட்டம். 

ஓரளவு விசாலமான ஆலய வளாகம், கொடிமரத்திலிருந்து முருகப் பெருமானின் திருச்சன்னிதிக்குச் செல்லும் வழியில், வலது புறம் பிரமாண்டமான திருமேனியோடு எழுந்தருளியுள்ள சக்தி விநாயகப் பெருமானைத் தரிசிக்கலாம். 

மூலக் கருவறையில் திருப்புகழ் தெய்வமான கந்தப் பெருமான்  ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களுடன், 'பிரம்மசாஸ்தா' எனும் திருவடிவில், நின்ற திருக்கோலத்தில் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றான்.

உட்பிரகாரத்தை வலம் வருகையில் மூலக் கருவறையின் பின்புறம், வள்ளியம்மையும், தெய்வயானை அம்மையும் தனிச்சன்னிதிகளில் திருக்காட்சி தருகின்றனர். பிரகாரச் சுற்றின் நிறைவுப் பாதையில் அருணகிரிப் பெருமான்; வள்ளலார்; ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்; கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் முதலிய அருளாளர்கள் வரிசையாய் எழுந்தருளி இருப்பதைத் தரிசித்து மகிழலாம். 

அருணகிரிப் பெருமான் வலது கரத்தில் சின்முத்திரை; இடது கரத்தில் திருப்புகழ் ஏடுகளுடன், திருமுகத்தில் தெய்வீகப் புன்னகையோடு அமர்ந்த திருக்கோலத்தில் அதிஅற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். காண்பதற்கரிய திருக்காட்சி. கச்சியப்ப சிவாச்சாரியாரும் இவ்விதமான திருக்கோலத்திலேயே காட்சி தருகின்றார். 

வெளிப்பிரகாரத்தை வலம் வரத் துவங்குகையில் மற்றுமொரு திருச்சன்னிதியில், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் வேலவனும், அப்பெருமானின் திருவடிகளில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளும் எழுந்தருளி இருக்கின்றனர், அற்புதத் திருக்காட்சியிது.

மேலும் இவ்வாலய வளாகத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் தீந்தமிழில் கந்தபுராணத்தை அரங்கேற்றியருளிய மண்டபத்தைத் தரிசித்து மகிழலாம். அரங்கேற்ற சமயத்தில், 'திகட சக்கர' எனும் விநாயகர் வணக்கத் திருப்பாடலில் இலக்கணச் சர்ச்சையொன்று எழ, குமரக் கோட்ட தெய்வமே புலவரின் திருவடியில் நேரில் எழுந்தருளி வந்து அச்சர்ச்சையினைத் தீர்த்தருளிய அற்புத நிகழ்வும் இத்தலத்திற்கு உரியது. 

அருணகிரிப் பெருமான் காஞ்சீபுரத்திற்கென அருளியுள்ள 44 திருப்புகழ் திருப்பாடல்களுள், 'அறிவிலாப் பித்தர்' மற்றும் 'புனமடந்தைக்கு' என்று துவங்கும் இரு திருப்பாடல்கள் இத்தலத்திற்குரியது. அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய அற்புத ஷேத்திரம்.

(Google Maps: 
Kumarakottam Temple, Periya, Kanchipuram, Tamil Nadu 631502, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

புன மடந்தைக்குத் தக்க புயத்தன்
     குமரன் என்றெத்திப் பத்தர் துதிக்கும்
          பொருளை நெஞ்சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும்

புகலும் எண்பத்தெட்டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொதுவை என்றொக்கத் தக்கதொர்அத்தம் ...... தனைநாளும்

சினமுடன் தர்க்கித்துச் சிலுகிக்!கொண்
     டறுவரும் கைக்குத்திட்டொருவர்க்கும்
          தெரிஅரும் சத்யத்தைத் தெரிசித்துன் ...... செயல்பாடித்

திசைதொறும் கற்பிக்கைக்கினி அற்பம்
     திருவுளம் பற்றிச் செச்சை மணக்கும்
          சிறுசதங்கைப் பொன் பத்மம் எனக்கென்றருள்வாயே

கனபெரும் தொப்பைக்கெள் பொரிஅப்பம்
     கனிகிழங்கிக்குச் சர்க்கரை முக்கண்
          கடலை கண்டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன்

கவள துங்கக் கைக் கற்பக முக்கண்
     திகழுநம் கொற்றத்தொற்றை மருப்பன்
          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... தனையீனும்

பனவி ஒன்றெட்டுச் சக்ரதலப் பெண்
     கவுரி செம்பொன் பட்டுத்தரிஅப்பெண்
          பழயஅண்டத்தைப் பெற்ற மடப்பெண் ...... பணிவாரைப்

பவதரங்கத்தைத் தப்ப நிறுத்தும்
     பவதி கம்பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த
     தனதனாத் தந்த தந்த ...... தனதான

அறிவிலாப் பித்தர் உந்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... அறியாத

அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து
     அவரை வாழ்த்தித் திரிந்து ...... பொருள்தேடிச்

சிறிது கூட்டிக் கொணர்ந்து தெருஉலாத்தித் திரிந்து
     தெரிவைமார்க்குச் சொரிந்து ...... அவமேயான்

திரியு மார்க்கத்து நிந்தை அதனை மாற்றிப் பரிந்து
     தெளிய மோக்ஷத்தை என்று ...... அருள்வாயே

இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பிரிந்து
     இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன்

இருளை நீக்கத் தவம் செய்தருள நோக்கிக் குழைந்த
     இறைவர் கேட்கத்தகும் சொல்  ......உடையோனே

குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
     குருவிஓட்டித் திரிந்த ...... தவமானைக்

குணமதாக்கிச் சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
     குமரகோட்டத்தமர்ந்த ...... பெருமாளே.

(2023 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை )

































No comments:

Post a Comment