Saturday, December 29, 2018

முள்வாய்

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: வேலூர் 

திருக்கோயில்: திருக்கோயில் இல்லை, திறந்த வெளியில் வேலொன்று பிரதிட்டை செய்விக்கப் பெற்றுள்ளது. 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணத்திற்கு அருகிலுள்ள கோணலம் எனும் சிற்றூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது முள்வாய் எனும் தலம், திருவாலங்காட்டிலிருந்து 6 கி.மீ பயணித்தும் இத்தலத்தினை அடையலாம்.

முன்பொரு சமயம் இத்தலத்தில் பெரியதொரு சிவாலயம் ஒன்றிருந்துப் பின் இவ்வூரின் தாழ்வான பகுதியோடு ஆலயமும் புதையுண்டு போயிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம் என்று திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் ஆய்வு நூலில், தகுந்த தரவுகளோடு குறிப்பிடுகின்றார்.

ஆலயமேதும் இருக்கப் போவதில்லை என்று முன்னமே தெரிந்திருந்த போதிலும், அருணகிரிநாதர் மீதுள்ள பெரும் காதலால், அவர்தம் திருப்பாதம் தோய்ந்த புண்ணிய தலத்தினை, அவர் சுவாசம் கலந்திருக்கும்  ஷேத்திரத்தினை,  அவர் திருவாக்கினால் திருப்புகழ் பெற்றுள்ள திருத்தலத்தினைத் தரிசிக்க ஆர்வத்துடன் பயணித்தோம்.

முள்வாய் எனும் அறிவிப்புக் கல்லினை ஒட்டிய பாதையில் பயணித்து ஊருக்குள் செல்கின்றோம். இங்கு மிகச்சிறிய கிருஷ்ணன் கோயில் போன்றதொரு அமைப்பு உள்ளது, விக்கிரகத் திருமேனி ஏதுமில்லை, மாறாக கண்ணனின் திருவுருவப் படங்கள் மட்டுமே உள்ளது. இச்சிறு கோயிலை 'பஜனை மண்டபமாக' பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இத்தலத் திருப்புகழில் அருணகிரியார் குழலூதும் கண்ணனைச் சிறப்பித்துப் பாடுவதும் இத்தல அமைப்புடன் ஒருவாறு பொருந்திப் போகின்றது என்று திரு. வலையப் பேட்டை கிருஷ்ணன் அவர்கள் சுட்டுவார். புதிதாக ஒரு சிறு விநாயகர் ஆலயமும் சமீபத்தில் கட்டுவிக்கப் பெற்றுள்ளது. 

'சிறுவாபுரி முருகன் திருப்பணிக்குழு' அன்பர்கள் அருகிலுள்ள நிலமொன்றினுள் ஆறுமுக தெய்வத்தின் திருக்கை வேலொன்றினைப் பிரதிஷ்டை செய்துள்ளதாக அறிந்து அவ்விடம் சென்றோம். கண்ணன் ஆலயத்திலிருந்து 10 நிமிட நடைப் பயணத்தில் இவ்விடத்தை அடைந்து விடலாம், திறந்த வெளியில் சிவகுமாரன் வேலாயுதனாய் திருக்காட்சி தந்தருள் புரிந்தான், முருகப் பெருமானின் திருமேனியைத் தரிசிக்க இயலாத தாபத்தை இந்த தரிசனம் ஓரளவு போக்கியது. 

அருணகிரிநாதர் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், 

(Google Maps: Mulvoy, Tamil Nadu 631210, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த
     தன்னா தனந்த தந்த ...... தனதான

மின்னார் பயந்த மைந்தர் தன்நாடினம் குவிந்து
     வெவ்வேறுழன்றுழன்று ...... மொழிகூற

விண்மேல் நமன்கரந்து மண்மேல் உடம்பொருங்க
     மெல்நாள் அறிந்தடைந்து ...... உயிர்போமுன்

பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்பணிந்து
     பொய்யார் மனங்கள் தங்கும் ...... அதுபோலப்

பொல்லேன் இறைஞ்சிரந்த சொல்நீ தெரிந்தழுங்கு
     புல்நாயுளும் கவின்று ...... புகுவாயே

பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன்னாடுறங்கை தந்து
     பன்னாகணைந்து சங்கம் ...... உறவாயில்

பன்னூல் முழங்கலென்று விண்ணோர் மயங்க நின்று
     பண்ணூதுகின்ற கொண்டல் ...... மருகோனே

முன்னாய் மதன்கரும்பு வில்நேர் தடம்தெரிந்து
     முன்ஓர் பொருங்கை என்று ...... முனையாட

மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம் மாதர் வந்திறைஞ்சு
     முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே.

(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment