(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: காஞ்சிபுரம்
திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
பஞ்ச பூத ஷேத்திரங்களுள் நிலத்தின் அம்சமாகத் திகழ்வது, தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. இத்தலத்தில் கந்தப் பெருமான் 4 திருவடிவங்களில் எழுந்தருளி இருக்கின்றான். பிராதன கோபுர வாயிலில் நுழையும் முன்னர் இராஜ கோபுர ஆறுமுகரைத் தரிசிக்கலாம் - அற்புதப் புன்முறுவலோடு கூடிய ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், நெடிதுயர்ந்த பிரமாண்டமான திருமேனியோடு மயில் மீதமர்ந்த திருக்கோலம், காண்பதற்கரிய திருக்காட்சி.
மூலக் கருவறையில் காமாக்ஷி அம்மையின் திருக்கரங்களால் சமைக்கப் பெற்ற மண்ணினாலான சிவலிங்கத் திருமேனியில் ஏகாம்பரேஸ்வரப் பரம்பொருள் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். மூலத் திருமேனிக்குப் பின்புறம் காமாக்ஷி அம்மையும் ஏகம்ப முதல்வரும் உருவத் திருமேனிகளில் எழுந்தருளி இருப்பது பிறவிப் பயனை நல்கும் ஆனந்தத் திருக்காட்சி.
உட்பிரகாரத்தை வரும் வருகையில், கருவறையின் பின்புறம் - வலது பக்கத்தில் வேலாயுதக் கடவுள் ஆறுதிருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் - சிறிய திருமேனியராய் எழுந்தருளி இருக்கின்றான்.
வெளிப்பிரகாரத்தை வலம் வருகையில், பிரசித்தி பெற்ற 'மாவடி' என்று குறிக்கப் பெறும் மாமரத்தினைத் தரிசிக்கலாம், இதன் சன்னிதிக்குப் படிகளேறிச் செல்லுகையில், வலது பக்கத் திருச்சுவற்றில் மயில் வாகனக் கடவுள் சிறிய திருமேனியனாய் எழுந்தருளி இருக்கின்றான். இம்மாவடிச் சன்னிதியில் காமாக்ஷி அம்மையும்; ஏகம்பத்துறை இறைவரும் திருமணக் கோலத்தில் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றனர், கண் கொள்ளா காட்சி.
மாவடியின் வலது புறம் தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் பிரசித்தி பெற்ற மாவடிக் கந்தனின் திருச்சன்னிதி அமைந்துள்ளது. இங்கும் முருகப் பெருமான் ஆறுதிருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இம்மூர்த்தியைக் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் தம்முடைய கந்தபுராணத் துதியில் பின்வரும் திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்,
-
மூவிரு முகங்கள் போற்றி; முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி; காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி; அன்னான்
சேவலும் மயிலும் போற்றி; திருக்கைவேல் போற்றி போற்றி
அருணகிரிப் பெருமான் காஞ்சீபுரத்திற்கென அருளியுள்ள 44 திருப்புகழ் திருப்பாடல்களுள் 37 திருப்பாடல்கள் இத்தலத்திற்குரியது. கண்கொண்ட பயனாய் இத்தலத்தைப் பன்முறை தரிசித்துப் போற்றிப் பயன்பெறுதல் வேண்டும்.
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 37.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
அதிமதம் கக்கப் பக்கம் உகக்!குஞ்
சரிதனம் தைக்கச் சிக்கென !நெக்கங்
கணைதரும் செச்சைப் பொற்புயன்அத்தன் ...... குறவாணார்
அடவியம் தத்தைக்கெய்த்துருகிச் !சென்
றடி பணிந்திட்டப் பட்டு மயல்!கொண்
டயர்பவன் சத்திக் கைத்தல நித்தன் ...... குமரேசன்
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கம்
களைபவன் பச்சைப் பக்ஷிநடத்தும்
துணைவன் என்றர்ச்சித்திச்சை தணித்துன் ...... புகழ்பாடிச்
சுருதியின் கொத்துப் பத்தியும் முற்றும்
துரியமும் தப்பித் தத்வமனைத்தும்
தொலையும் அந்தத்துக்கப்புற நிற்கும் ...... படிபாராய்
கதிபொருந்தக் கற்பித்து நடத்தும்
கனல்தலம் புக்குச் சக்ரமெடுக்கும்
கடவுளும் பத்மத் தச்சனும் உட்கும் ...... படிமோதிக்
கதிரவன் பல் குற்றிக் குயிலைத்திண்
சிறகரிந்தெட்டுத் திக்கர் வகுக்கும்
கடகமும் தட்டுப் பட்டொழியக் கொன்றபிராமி
பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப்பெண்
பரிவொழிந்து அக்கிக்குட்படு தக்கன்
பரிபவம் பட்டுக் கெட்டொழியத் தன் ...... செவிபோய்அப்
பணவி பங்கப் பட்டப்படி வெட்கும்
படி முனிந்தற்றைக் கொற்றம் விளைக்கும்
பரமர் வந்திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கனக தம்பத்தைச் செச்சையை மெச்சும்
கடக சங்கத்துப் பொற்புய வெற்பன்
கடலுள் வஞ்சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாகக்
கறுவு செஞ்சத்திப் பத்ம கரத்தன்
குமரன் என்றர்ச்சித்தப்படி செப்பும்
கவி மொழிந்தத்தைக் கற்றற உற்றும் ...... புவியோர் போய்
குனகியும் கைக்குக் கற்பகம் !ஒப்பென்
றனகன் என்றிச்சைப் பட்டதளிக்கும்
குமணன் என்றொப்பிட்டித்தனை பட்டிங்கிரவான
குருடு கொண்டத்தச் சத்தம்அனைத்தும்
திருடியும் சொற்குத் தக்க தொடுத்தும்
குலவியும் கத்தப்பட்ட கலக்கம் ...... தெளியாதோ
சனகன் அன்புற்றுப் பெற்ற மடப்பெண்
தனிப்பெரும் கற்புச் சக்ரநடத்தும்
தகைஇலங்கைச் சுற்றத்தை முழுத்தும் ...... சுடவேவெஞ்
சமர சண்டக் கொற்றத்தவரக்கன்
கதிர்விடும் பத்துக் கொத்து முடிக்கும்
தனியொர் அம்பைத் தொட்டுச்சுரர் விக்னம் ...... களைவோனும்
தினகரன் சொர்க்கத்துக்கிறை சுக்ரன்
சசிதரன் திக்குக் கத்தர் அகத்யன்
திசைமுகன் செப்பப்பட்ட வசிட்டன் ...... திரள்வேதம்
செகதலம் சுத்தப் பத்தியர் சித்தம்
செயல் ஒழிந்தற்றுப் பெற்றவர் மற்றும்
சிவனும் வந்திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
செடியுடம்பத்தித் தெற்றி இரத்தம்
செறி நரம்பிட்டுக் கட்டிய சட்டம்
சிறை திரண்டொக்கத் தொக்க வினைப் பந்த விகாரம்
திமிர துங்கத் தத்துத் திரையெற்றும்
செனன பங்கத்துத் துக்க கடல்கண்
திரு குரும்பைப் பட்டுச் சுழல் தெப்பம் ...... கரணாதி
குடிபுகும் பொக்கப் புக்கில் இறப்பின்
குடிகலம் வெந்தொக்குக் கொட்டில் மலத்தின்
குசை சுமந்தெட்டுத் திக்கிலு முற்றும் ...... தடுமாறும்
குவலயம் கற்றுக் கத்தி இளைக்கும்
சமய சங்கத்தைத் தப்பி இருக்கும்
குணமடைந்துட்பட்டொக்க இருக்கும் ...... படிபாராய்
படிதரும் கற்புக் கற்பக முக்கண்
கொடிபசும் சித்ரக்குத் தரமுத்தம்
பணி நிதம்பத்துச் சத்திஉகக்கும் ...... குமரேசா
பரவசம் கெட்டெட்டக்கர நித்தம்
பரவும் அன்பர்க்குச் சித்தியளிக்கும்
பரமர் வந்திக்கத் தக்க பதத்தன் ...... குருநாதா
தொடியிடும் பத்மக் கைக்கும் இடைக்கும்
சுருள்படும் பத்திப் பட்ட குழற்கும்
துகிர் கடைந்தொப்பித்திட்ட இதழ்க்கும் ...... குறமானின்
சுடர்படும் கச்சுக் கட்டு முலைக்கும்
துவளும் நெஞ்சத்தச் சுத்தஇருக்கும்
சுரரும் வந்திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை !விட்டன்
றசுரர் தண்டத்தைச் செற்றவிதழ்ப் !பங்
கயனைமுன் குட்டிக் கைத்தளை இட்டும்பரை ஆளும்
கடவுள் அன்புற்றுக் கற்றவர் சுற்றும்
பெரிய தும்பிக்கைக் கற்பக முன்தம்
கரதலம் பற்றப் பெற்ற ஒருத்தன் ...... ஜகதாதை
புனஇளம் தத்தைக்கிச்சை உரைக்கும்
புரவலன் பத்தர்க்குத் துணை நிற்கும்
புதியவன் செச்சைப் புட்ப மணக்கும் ...... பலபாரப்
புயனெனும் சொல் கற்றுப் பிறகற்கும்
பசையொழிந்தத்தத்திக்கென நிற்கும்
பொருள்தொறும் பொத்தப் பட்டதொர் அத்தம் ...... பெறுவேனோ
அனல்விடும் செக்கண் திக்கயம் எட்டும்
பொர அரிந்திட்டெட்டில் பகுதிக்!கொம்
பணிதரும் சித்ரத்தொற்றை உரத்தன் ...... திடமாக
அடியொடும் பற்றிப் பொற் கயிலைக் !குன்
றது பிடுங்கப் புக்கப் பொழுதக் !குன்
றணிபுயம் பத்துப் பத்து நெரிப்புண்டவன் நீடும்
தனதொர் அங்குட்டத்தெள் பலடுக்கும்
சரிஅலன் கொற்றத் துக்ர அரக்கன்
தசமுகன் கைக்குக் கட்கமளிக்கும் ...... பெரியோனும்
தலைவியும் பக்கத் தொக்க இருக்கும்
சயிலமும் தெற்குச் சற்குரு வெற்பும்
தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
தெரியலம் செச்சைக் கொத்து முடிக்கும்
பரி திகந்தத்தைச் சுற்ற நடத்தும்
சிறைவிடும் சொர்க்கத்துச் சுரரைக் கங்கையில் வாழும்
சிறுவன் என்றிச்சைப் பட்டு பஜிக்கும்
படிபெரும் பத்திச் சித்ர கவித்வம்
சிறிதுமின்றிச் சித்தப் பரிசுத்தம் ...... பிறவாதே
பரிகரம் சுத்தத் தக்க ப்ரபுத்வம்
பதறி அங்கட்டம் பட்டனர் தத்வம்
பலவையும் கற்றுத் தர்க்கமத வம்பழியாதே
பரபதம் பற்றப் பெற்ற எவர்க்கும்
பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்
பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் ...... துயர்போமோ
சரியுடன் துத்திப் பத்தி முடிச்செம்
பணதரம் கைக்குக் கட்டிய நெட்டன்
தனிசிவன் பக்கத்தற்புதை பற்பம் ...... திரிசூலம்
தரி கரும்பொக்கத் தக்க மொழிச்!சுந்
தரிஅரும்பிக் கப்பித்த !தனத்தந்
தரி சுரும்பிக்குப் பத்ரை எவர்க்கும் ...... தெரியாத
பெரிய பண் தத்தைச் சத்திய பித்தன்
பிரிதிஉண் கற்புப் பச்சை எறிக்கும்
ப்ரபையள் தண்டில் கைப் பத்ம மடப்பெண் ...... கொடிவாழ்வே
பிரமர் அண்டத்தைத் தொட்டதொர் வெற்பும்
பிளவிடும் சத்திக் கைத்தல நித்தம்
பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கறையிலங்குக்ரச் சத்தி தரிக்கும்
சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்
கரவடன் கொற்றக் குக்குடவத்தன் ...... தனிவீரக்
கழலிடும் பத்மக் கண்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றும்
கடக வஞ்சிக்குக் கர்த்தன் எனச் செந்தமிழ் பாடிக்
குறையில் அன்புற்றுக் குற்றம் அறுக்கும்
பொறைகள் நந்தற்பப் புத்தியை விட்டென்
குணம்அடங்கக் கெட்டுக்குணம் மற்றொன்றிலதான
குணமடைந்தெப் பற்றுக்களும் அற்றும்
குறியொடும் சுத்தப் பத்தர் இருக்கும்
குருபதம் சித்திக்கைக்கருள் சற்றும் ...... கிடையாதோ
பிறைகரந்தைக் கொத்துப் பணி மத்தம்
தலை எலும்பப்புக் கொக்கிறகக்கம்
பிரமன் அன்றெட்டற்கற்ற திருக் கொன்றையும் வேணிப்
பிறவு நின்றொக்கத் தொக்கு மணக்கும்
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறு கரும்பத் தக்கத்தருள் நற்பங்கய வாவி
திறைகொளும் சித்ரக் குத்து முலைக் !கொம்
பறியும்அம் தத்தைக் கைக்ககம் மொய்க்கும்
த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பின் ...... திருவான
தெரிவையம் துர்க்கிச் சத்தி எவர்க்கும்
தெரிஅரும் சுத்தப் பச்சை நிறப் பெண்
சிறுவ தொண்டர்க்குச் சித்திஅளிக்கும் ...... பெருமாளே
திருப்பாடல் 7:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
அரிஅயன் புட்பிக்கக் குழுமிக் !கொண்
டமரர் வந்திக்கத் தட்டுருவச்!சென்
றவுணர் அங்கத்தைக் குத்தி முறித்தங்கொரு கோடி
அலகை நின்றொத்தித் தித்திஅறுத்தும்
பலஇயம் கொட்டச் சக்கடி !கற்றந்
தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப்
பரிமுகம் கக்கச் செக்கண் விழித்தும்
பவுரி கொண்டெட்டுத் திக்கை உடைத்தும்
படுகளம் புக்குத் தொக்கு நடிக்கும் ...... படிமோதிப்
படைபொரும் சத்திப் பத்ம நினைத்தும்
சரவணன் கச்சிப் பொற்பன் எனப்பின்
பரவியும் சித்தத்துக்கு வரத் தொண்டடைவேனோ
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
சிறிய வஞ்சிக் கொத்தெய்த்த நுசுப்பும்
ப்ரிதி ஒழிந்தொக்கக் கைக்கிளை துத்தம் ...... குரலாதி
பிரிவில் கண்டிக்கப்பட்ட உருட்டும்
கமுகமும் சிற்பச் சித்ரம் உருக்கும்
பிரதிஅண்டத்தைப் பெற்றருள் சிற்றுந்தியும் நீலக்
கரிய கொண்டற்கொப்பித்த கதுப்பும்
திலதமும் செப்பொற் பட்டமும் முத்தின்
கனவடம் கட்டப்பட்ட கழுத்தும் ...... திருவான
கருணையும் சுத்தப் பச்சை வனப்பும்
கருதும் அன்பர்க்குச் சித்தியளிக்கும்
கவுரி அம்பைக்குப் புத்ர எவர்க்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கனிதரும் கொக்குக் கண்செவி வெற்பும்
பழநியும் தெற்குச் சற்குரு வெற்பும்
கதிரையும் சொற்குட்பட்ட திருச்செந்திலும் வேலும்
கனவிலும் செப்பத் தப்பும்எனைச் !சங்
கட உடம்புக்குத் தக்க அனைத்தும்
களவு கொண்டிட்டுக் கற்பனையில்கண் ...... சுழல்வேனைப்
புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்நம்
பழைய கங்கைக்குற்றப் புது முத்தம்
புவியில் அன்றைக்கற்றெய்ப்பவர் வைப்பென்றுருகா !எப்
பொழுதும் வந்திக்கைக் கற்ற எனைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையைஎன் செப்பிச் செப்புவதொப்பொன்றுளதோ தான்
அனனியம் பெற்றற்றற்றொரு பற்றும்
தெளிதரும் சித்தர்க்குத் தெளிசில்!கொந்
தமலை தென் கச்சிப் பிச்சிமலர்க் கொந்தள பாரை
அறவிநுண் பச்சைப் பொற்கொடி !கற்கண்
டமுதினும் தித்திக்கப்படு சொல்!கொம்
பகில அண்டத்துற்பத்தி செய் முத்தின் ...... பொலமேருத்
தனிவடம் பொற்புப் பெற்ற முலைக் !குன்
றிணை சுமந்தெய்க்கப் பட்ட நுசுப்பின்
தருணி சங்குற்றுத் தத்து திரைக் கம்பையினூடே
தவமுயன்றப் பொற்றப்படி கைக் !கொண்
டறம் இரண்டெட்டெட்டும் வளர்க்கும்
தலைவி பங்கர்க்குச் சத்யம் உரைக்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
தசை துறுந்தொக்குக் கட்டளை சட்டம்
சரிய வெண் கொக்குக்கொக்க நரைத்தம்
தலை உடம்பெய்த்தெற்புத் தளை நெக்கிந்த்ரிய மாறித்
தடிகொடும் திக்குத் தப்ப நடக்கும்
தளர்வுறும் சுத்தப் பித்த விருத்தன்
தகைபெறும் பற்கொத்துக்கள் அனைத்தும் ...... கழலா!நின்
றசலரும் செச்செச் செச்செ எனச்!சந்
ததிகளும் சிச்சிச் சிச்சி எனத்!தங்
கரிவையும் துத்துத் துத்து எனக் கண்டுமியா !மற்
றவரும் நிந்திக்கத் தக்க !பிறப்பிங்
கலம்அலம் செச்சைச் சித்ரமணித் !தண்
டை அரவிந்தத்தில் புக்கடைதற்கென்றருள்வாயே
குசை முடிந்தொக்கப் பக்கரை இட்டெண்
திசையினும் தத்தப் புத்தியை நத்தும்
குரகதம் கட்டிக் கிட்டி நடத்தும் ...... கதிர்நேமிக்
குலரதம் புக்கொற்றைக் கணையிட்டெண்
திரிபுரம் சுட்டுக் கொட்டை பரப்பும்
குரிசில் வந்திக்கக் கச்சியில் நிற்கும் ...... கதிர்வேலா
திசைமுகன் தட்டுப் பட்டெழவற்கும்
சிகரியும் குத்துப் பட்டுவிழத் தெண்
திரைஅலங்கத்துப் புக்குலவிச் சென்றெதிரேறிச்
சிரம்அதுங்கப்பொற் கண்திகை !இட்டன்
றவுணர் நெஞ்சில் குத்திக் கறை கட்கம்
சிதறி நின்றெட்டிப் பொட்டெழ வெட்டும் ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
புரைபடும் செற்றக் குற்ற மனத்தன்
தவமிலன் சுத்தச் சத்யஅசத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்கும் ...... துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின்
கரையறும் சித்ரச் சொற்புகழ் கற்கும்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்பும் ...... கதிர்வேலும்
கதிரையும் சக்ரப் பொற்றையும் மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியும் முற்றும்
கனவிலும் சித்தத்தில் கருதிக் கொண்டடைவேனோ
குரைதரும் சுற்றுச் சத்த சமுத்ரம்
கதறி வெந்துட்கக் கட்புர துட்டன்
குலம்அடங்கக் கெட்டொட்டொழியச் சென்றொரு நேமிக்
குவடொதுங்கச் சொர்க்கத்தர் இடுக்கம்
கெடநடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம்
குலிச துங்கக்கைக் கொற்றவன் நத்தம் ...... குடியேறத்
தரை விசும்பைச் சிட்டித்த இருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழியச் !சந்
ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத்
தகைய தண்டைப் பொற் சித்ர விசித்ரம்
தரு சதங்கைக் கொத்தொத்து முழக்கும்
சரண கஞ்சத்தில் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
இதத்துப் பற்றிதழ்த் துப்பற்றிருள் பொக்கக் !கருத்திட்டத்
தியக்கத்தில் தியக்குற்றுச் ...... சுழலாதே
எலுப்புச் சுக்கிலக் கத்தத்தடித் தொக்குக் கடத்தைப்!பெற்
றெடுத்துப் பற்றடுத் தற்பத்துழலாதே
சுதத் தத்தச் சதத்தத்தம் பதத்தர்க்குற்றவற்றைச் சொல்
துவக்கில் பட்டவத்தைப் பட்டயராதே
துணைச் செப்பத்தலர் கொத்துற்பலச் செச்சைத் தொடைப் பத்திக்
கடப்பப் பொற்கழல் செப்பித் ...... தொழுவேனோ
கொதித்துக் குத்திரக் கொக்கைச் சதித்துப் பற்றி கைக்குள்பொற்
குலத்தைக் குத்திரத்தைக் குத்திய வேலா
குறத் தத்தைக்கறத்தத்திக்கு முத்தத்தத்தம் ஒக்கிக்குக்
குலத்துக் குக்குடக் கொற்றக் ...... கொடியோனே
கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக் கொற்றவற்குக்!கற்
பகச் சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனே
கடுக்கைக்கண் செவிக் கற்றைச் சடைப்பக்கக் கொடிக் கற்புக்
கடல் கச்சிப்பதிச் சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 12:
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
எனக்குச் சற்றுனக்குச் சற்றெனக் கத்தத்தவர்க்கிச்சைப்
பொருள்பொற் தட்டிடிக்கைக்குக் ...... குடில்மாயம்
எனக் கட்டைக்கிடைப்பட்டிட்டு அனல்சுட்டிட்டு அடக்கைக்குப்
பிறக்கைக்குத் தலத்தில் புக்கிடியாமுன்
தினைக்குள் சித்திரக் கொச்சைக் குறத் தத்தைத் தனத்தைப்பொன்
பெறச் செச்சைப் புயத்தொப்பித்தணிவோனே
செருக்கிச் சற்றுறுக்கிச் சொல் பிரட்டத் துட்டரைத் தப்பித்
திரள் தப்பிக் கழல் செப்பத் ...... திறல் தாராய்
பனைக்கைக் கொக்கனைத் தட்டுப் படக்குத்திப் படச் சற்பப்
பணத்துட்கக் கடல்துட்கப் ...... பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்
பலிப்பப் பத்தருக்கொப்பித்தருள் வாழ்வே
கனிக்குத் திக்கனைத்துச் சுற்றிடப் பச்சைக் !கனப்பக்ஷிக்
கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே
கலிக்கொப்பில் சலிப்பற்றுக் கதிக்கொத்திட்டெழில் சத்திக்
கடற் கச்சிப்பதிச் சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 13:
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கடத்தைப் பற்றெனப் பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்
கயற்கண் பொற்பிணைச் சித்ரத் ...... தனமாதர்
கலைக்குள் பட்டறக்கத்திச் சலித்துக் கட்டளைச்சொற் பொய்த்
திரைக்குள் பட்டறச் செத்திட்டுயிர் போனால்
எடுத்துக் கொட்டிடக் கட்டைப் படத்தெட்டத் தணல் தட்டக்
கொளுத்திச் சுற்றவர்ப் பற்றற்றவர் போமுன்
இணக்கிப் பத்திமைச் செச்சைப் பதத்தைப் பற்றுகைக்குச் சொல்
தமிழ்க் கொற்றப் புகழ் செப்பித் ...... திரிவேனோ
அடைத்திட்டுப் புடைத்துப் பொற்பதச் சொர்க்கத் தனைச் !சுற்றிட்
டலைப்புப் பற்றெனச் சொற்றிட்டறு சூரை
அடித்துச் செற்றிடித்துப் பொட்டெழப் பொர்ப்புப் படக் !குத்திட்
டலைத்துச் சுற்றலைத்தெற்றுக் ...... கடல் மாயப்
புடைத்திட்டுப் படிக்குள் செற்றடப்புக்குக் கதத் துக்கக்
கயில் கொக்கைப் படக்குத்திப் ...... பொருவோனே
புனத்தில்பொன் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப்
புணர்க் கச்சிப் பதிச் சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 14:
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட்டுருப்பெற்றுக்
கருத்தின்கண் பொருள்பட்டுப் ...... பயில்காலம்
கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்
கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் ...... சமன்ஆவி
பெருக்கப் புத்தியிற்பட்டுப் புடைத் துக்கக் கிளைப்பின் பொய்ப்
பிணத்தைச் சுட்டகத்தில் புக்கனைவோரும்
பிறத்தல் சுற்றம் முற்றுற்றிட்டழைத்துத் தொக்கறக்கத்துப்
பிறப்புப் பற்றறச் செச்சைக் ...... கழல்தாராய்
பொருப்புக் கர்ப்புரக் கச்சுத் தனப்பொற்புத் தினைப் பச்சைப்
புனக் கொச்சைக் குறத் தத்தைக்கினியோனே
புரத்தைச் சுட்டெரித்துப் பற்றலர்க்குப் பொற்பதத் துய்ப்பைப்
புணர்த்தப் பித்தனைக் கற்பித்தருள்வோனே
செருக்கக் குக்கரைக் குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்
சினத்திட்டுச் சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா
திருத்தத்தில் புகல்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச் சித்ரத்
திருக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 15:
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கறுக்கப்பல் துவர்ப்பிட்டுச் சிரித்துச் சற்றுறுக்கிக் கண்
பிறக்கிட்டுப் படக்கண் பித்திளைஞோர் தம்
கழுத்தைச் சிக்கெனக் கட்டித் தனச்செப்புப் !படக்குத்திட்
டுருக்கிக் கற்பழிக்கப் பொற்பெழு காதல்
புறப்பட்டுக் களிக்கக் கற்புரத்தைப் பிட்டரக்கிப் பொன்
பணிக்கட்டில் புறத்துற்றுப் ...... புணர்மாதர்
பொருத்தத்தைத் தவிர்த்துச் சற்றிரக்ஷித்துப் புரப்பப்பொன்
பதத்தைப் பெற்றிருக்கைக்குப் ...... பெறுவேனோ
திறல்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக் கொக்கரித்துச் !சக்
கரிக்குப் புத்திரற்குற்றுத் ...... தளைபூணச்
சினத்துப்பொன் பொருப்பைப் பொட்டெழுத்தித் திக்கரித்துப் !புத்
திரத்தத்தில் சிரித்துற்றுப் ...... பலபேய்கள்
பறிக்கப்பச் சிறைச்சிக்கண் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
பரப்பொய்க் கட்டறப் புக்குப் ...... பொருதோனே
பறிக்கப் பச்சிரைச்சிக்கண் கறிக்குப்பைச் சிரச் சிக்குப்
பரப்பொய்க் கட்டறப் புக்குப் ...... பொருதோனே
பணிச் செச்சைத் தொடைச் சித்ரப் புயத்துக்ரப் படைச் சத்திப்
படைக் கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 16:
தத்தத் தனதான தத்தத் ...... தனதான
தத்தத் தனதான தத்தத் ...... தனதானா
அற்றைக்கிரைதேடி அத்தத்திலும்ஆசை
பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
கற்றுற்றுணர் போதா கச்சிப் ...... பெருமாளே.
திருப்பாடல் 17:
தத்தத் தத்தத் ...... தனதான
தத்தத் தத்தத் ...... தனதான
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத்தற்றத்தருள்வோனே
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான
அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து
அத்தத்து அத்தம் ...... தருவோர் தாள்
அர்ச்சித்து இச்சித்து அக்கத்தக்கத்
தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச்
செற்றைப் புன்சொல் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப் ...... பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய்
துற்றுப் பின் புக்குற்றக் கொக்கைத்
துட்கத் திட்கப் ...... பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக்கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக் ...... களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான
சுத்தச் சித்தத் தொல் பத்தர்க்குச்
சுத்தப் பட்டிட்டமுறாதே
தொக்கப் பொக்கச் சில்கட்சிக்குள்
சொற் குற்றத்துத் ...... துறைநாடி
பித்தத்தைப் பற்றித் தைத்தற்று !உற்
றொத்துக் கித்திப் ...... பிணிமாதர்
பெட்டில் கட்டுத் தட்டுப்பட்டுப்
பிற்பட்டிட்டுத் ...... தளர்வேனோ
அத்தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த
அத்திக்கத்துப் ...... பலம்ஈவாய்
அர்ச்சித்துப் பொன் செக்கொச்சைத் !தத்
தைக்குச் செச்சைத் ...... தொடை சூழ்வாய்
கத்தத்தித் தத்தத்தில் கொக்கைக்
கைத்தச் சத்திப் ...... படையேவும்
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 20:
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
தத்தத் தத்தத் தனனத் ...... தனதான
கொக்குக்கொக்கத் தலையில் பற்றுச் சிக்கத்தளகக்
கொத்துற்றுக்குப் பிணி உற்றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையில் பல் தத்துற்றுக் கழலக்
கொத்தைச் சொல் கற்றுலகில் ...... பலபாஷை
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும்
சிக்கற்றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத்துக்குப் புகலப் ...... பெறுவேனோ
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டிட்டு எதிரிட்டு
அத்ரத்தெற்றிக் கடுகப் ...... பொருசூரன்
அச்சுக் கெட்டுப் படை விட்டச்சப் பட்டுக் கடலுள்
புக்குப் பட்டுத் துருமத்தடைவாகத்
தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்குற்றது கண்
கைக்கொட்டிட்டு இட்டுடல்சில் ...... கணமாடிச்
சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர்செய்ச்
சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 21:
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப்படு மைக் ...... கடலாலே
சர்ப்பத் தத்தில் பட்டுக் கெட்டுத்
தட்டுப்படும்அப் ...... பிறையாலே
சித்தத்துக்குப் பித்துற்றுச்சச்
சித்ரக் கொடி உற்றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் ...... தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துள் புக்குக்
குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பில் பச்சைக்
கொச்சைக் குறவிக்கினியோனே
சுத்தப் பத்தத்தர்க்குச் சித்தத்
துக்கத்தை ஒழித்திடும் வீரா
சொர்க்கத்துக்கொப்புற்றக் கச்சிச்
சொக்கப் பதியில் ...... பெருமாளே.
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் ...... தனதான
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப்
பொச்சைப் பிச்சற்பக் கொச்சைச்சொல் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார் தோய்
துக்கத் துக்கத்தில் சிக்குப்பட்டிட்டுத்
துக்கித்துக்கெய்த்துச் ...... சுழலாதே
சுத்தச் சித்தத்துப் பத்திப் !பத்தர்க்கொத்
துச் சற்றர்ச்சிக்கப் ...... பெறுவேனோ
திக்குத் திக்கற்றுப் பைத்தத்து அத்திக்குச்
செல்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா
செப்பச் சொர்க்கத்துச் செம்பொன் தத்தைக்குச்
செச்சைக் கொத்தொப்பித்தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக்கிக்கி
கண் கத்தத்தர்க்குப் ...... பெரியோனே
கற்றைப் பொற்றெத்தப் பெற்றப் பொற் சிற்பக்
கச்சிக்குள் சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 23:
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்
தனனத்தத் தனனத்தத் ...... தனதான
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற்பல நச்சுக்
கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம்
அளகக் கொத்தென ஒப்பிப் புளுகிச் சொல் பல!கற்பித்
திளகிக் கற்புளம் நெக்குத் ...... தடுமாறித்
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக்கயர்வுற்றுத்
தொடியர்க்கிப்படி எய்த்துச் ...... சுழலாதே
சுருதிப்பொன் பொருள் செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்
தொழு செச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ
புயலத்தைக் குயில் தத்தைக் கிளைபுக்குத் தொளை பச்சைப்
புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா
புரவிக் கொட்பிரதற்றத்திருள் திக்கிப் படிமட்கப்
புகல்பொன் குக்குட வெற்றிக் ...... கொடியோனே
கயிலச்சுத் தர தத்துச் சயிலத்துத்தர நிற்கக்
கரணிச் சித்தருள் கச்சிப் ...... பதியோனே
கடலில் கொக்கடல் கெட்டுக் கரம்உட்கத் தரம்உட்கப்
பொரு சத்திக் கரசொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 24:
தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன ...... தனதான
கச்சிட்டணி முலை தைச்சிட்டுருவிய
மச்சக் கொடி மதன் ...... மலராலும்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படஎழும் அதனாலும்
பிச்சுற்றிவள் உளம் எய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல ...... இனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடைஅது ...... தரவேணும்
பச்சைத் திருவுமை இச்சித்தருளிய
கச்சிப் பதிதனில் ...... உறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல ...... கதிர்வேலா
இச்சித்தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய ...... திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே.
திருப்பாடல் 25:
தனதன தானாந்தன தனதன தானாந்தன
தனதன தானாந்தன ...... தனதான
கமலரு சோகம்பரம் முடிநடு ஏய்பூங்கணை
கலகமர் வாய் தோய்ந்தமளியின் மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவிடாய் போம்படி
கனஇய வாரேந்தின ...... இளநீர்!தோய்ந்
தெமதுயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடும் ...... அநுபோகம்
இனிவிட வேதாந்த பரமசுக வீடாம் பொருள்
இதஇய பாதாம்புயம் ...... அருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம்
அதுலன நீலாம்பரம் ...... அறியாத
அநகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியில் ...... உறைவோனே
விமல கிராதாங்கனை தனகிரி தோய் காங்கெய
வெடிபடு தேவேந்திரன் ...... நகர்வாழ
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.
திருப்பாடல் 26:
தனன தானன தத்தன தனதன
தானா தத்தத் ...... தனதான
கருமமான பிறப்பற ஒருகதி
காணாதெய்த்துத் ...... தடுமாறும்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் ...... கலைநூலின்
வரும் அநேக விகற்ப விபரித!ம
னோ பாவத்துக்கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயாமற்குப் ...... புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுல!ச
காதேவர்க்குப் ...... புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட்டினிலாளும்
குரு மகீதல முட்பட உளமது
கோடாமல் க்ஷத்ரியர் மாளக்
குலவு தேர்கட அச்சுதன் மருக!கு
மாரா கச்சிப் ...... பெருமாளே.
திருப்பாடல் 27:
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான
கலகலெனப் பொன் சேந்த நூபுர
பரிபுரம் ஒத்தித் தாம் தனாமென
கரமலர் அச்சில் தாந்தொமாடிய ...... பொறியார்பைங்
கடிதடம் உற்றுக் காந்தள் ஆமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
கனதன பொற்பிட்டோங்கு மார்பொடு ...... வடமாடச்
சலசல சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்துலாவிய
சலசமுகத்துச் சார்ந்த வாள்விழி ...... சுழலாடத்
தரள நகைப் பித்தாம்பல் ஆரிதழ்
குலமுகில் ஒத்திட்டாய்ந்த ஓதியர்
சரசம் உரைத்துச் சேர்ந்த தூவையர் ...... உறவாமோ
திலத முகப்பொன் காந்தி மாதுமை
எனையருள் வைத்திட்டாண்ட நாயகி
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி
திரிபுவனத்தைக் காண்ட நாடகி
குமரி சுகத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்பவீஅமை ...... அருள்பாலா
அலகை இரத்தத்தோங்கி மூழ்கிட
நரி கழுகுப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர் குலத்தைக் காய்ந்த வேல்கரம் உடையோனே
அமரர் மகட்குப் போந்த மால்கொளும்
விபுத குறத்திக்காண்டவா தினம்
அழகு சிறக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 28:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தா ...... தனதான
கொத்தார் பற்கால் அற்றேகப் பாழ்
குப்பாயத்தில் ...... செயல் மாறிக்
கொக்காகிக் கூனிக்கோல் தொட்டே
கொட்டாவிக் குப்புற வாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ...... எனவேகேள்
செற்றே சுட்டே விட்டேறிப்போம்
அப்பேதுத் துக்கம் அறாதோ
நித்தா வித்தாரத் தோகைக்கே
நிற்பாய் கச்சிக் ...... குமரேசா
நிட்டூரச் சூர் கெட்டோடப் போர்
நெட்டோதத்தில் ...... பொருதோனே
முத்தாரத் தோளில் கோடற்பூ
முட்டாதிட்டத்தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
திருப்பாடல் 29:
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
கோவைச் சுத்தத் துப்பதரத்துக் ...... கொடியார்தம்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப்
பாவத்துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே
பாடப் பத்திச் சித்தம் எனக்குத் ...... தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா
மாணிக்கச் சொர்க்கத்தொரு தத்தைக்கினியோனே
சேவல் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிரவர்த்திப் ...... பெருமாளே.
திருப்பாடல் 30:
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான
சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியில் கூடவே களித்தநுபூதி
சேர அற்புதக் கோலமாமெனச்
சூரியப் புவிக்கேறியாடுகச்
சீலம் வைத்தருள் தேறியே இருக்கறியாமல்
பாசம் விட்டு விட்டோடி போனதுப்
போதும் இப்படிக்காகிலேன் இனிப்
பாழ் வழிக்கடைக்காமலே பிடித்தடியேனைப்
பார்அடைக்கலக் கோலமாமெனத்
தாபரித்து நித்தாரம் ஈதெனப்
பாத பத்மநற் போதையே தரித்தருள்வாயே
தேசில் துட்ட நிட்டூர கோதுடைச்
சூரை வெட்டி எட்டாசை ஏழ்புவித்
தேவர் முத்தர்கட்கேதமே தவிர்த்தருள்வோனே
சீர்படைத்தழல் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாதன் ஓர்புறச்
சீர்திகழ்ப் புகழ்ப் பாவை ஈனபொற் ...... குருநாதா
காசி முத்தமிழ்க் கூடல்ஏழ்மலைக்
கோவல் அத்தியில் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழியாருர் பொற் ...... புலிவேளூர்
காளஅத்தி அப்பால் சிராமலைத்
தேசமுற்று முப்பூசை மேவிநல்
காம கச்சியில் சால மேவுபொற் பெருமாளே.
திருப்பாடல் 31:
தத்ததன தந்த தத்ததன தந்த
தத்ததன தந்த ...... தனதான
நச்சரவமென்று நச்சரவமென்று
நச்சுமிழ் களங்க ...... மதியாலும்
நத்தொடு முழங்கனத்தொடு முழங்கு
நத்திரை வழங்கு ...... கடலாலும்
இச்சை உணர்வின்றி இச்சையென வந்த
இச்சிறுமி நொந்து ...... மெலியாதே
எத்தனையில் நெஞ்சில் எத்தன முயங்கி
இத்தனையில் அஞ்சல் ...... எனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை எங்கும் உறைவோனே
பத்தியுடன் நின்று பத்தி செயுமன்பர்
பத்திரம் அணிந்த ...... கழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு
கச்சியில் அமர்ந்த ...... கதிர்வேலா
கற்பக வனம்கொள் கற்பக விசும்பர்
கைத்தளை களைந்த ...... பெருமாளே.
தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன ...... தனதான
படிறொழுக்கமும் மட !மனத்துள
படி பரித்துட(ன்) நொடிபேசும்
பகடிகட்குள மகிழ மெய்ப்பொருள்
பல கொடுத்தற ...... உயிர்வாடா
மிடியெனப் பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட ...... மிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினையறப் பதம் ...... அருள்வாயே
கொடியிடைக் குற வடிவியைப் புணர்
குமர கச்சியில் ...... அமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி ...... திருமார்பா
பொடிபடப் பட நெடிய விற்கொடு
புரமெரித்தவர் ...... குருநாதா
பொரு திரைக்கடல் நிருதரைப் படை
பொருதுழக்கிய ...... பெருமாளே.
திருப்பாடல் 33:
தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன ...... தந்ததான
மகுடக் கொப்பாடக் காதினில்
நுதலில் பொட்டூரக் கோதிய
மயிரில் சுற்றோலைப் பூவோடு ...... வண்டுபாட
வகைமுத்துச் சோரச் சேர்நகை
இதழில்சொல் சாதிப்பார் இயல்
மதனச் சொற்பாடுக் கோகில ...... ரம்பை மாதர்
பகடிச் சொல்கூறிப் போர்மயல்
முகஇச்சைப் பேசிச் சீரிடை
பவளப் பட்டாடைத் தோளிரு ...... கொங்கை மேலாப்
பண மெத்தப் பேசித் தூதிடும்
இதயச் சுத்தீனச் சோலிகள்
பலர் எச்சிற்காசைக் காரிகள் ...... சந்தமாமோ
தகுடத்தத் தானத் தானன
திகுடத்தித் தீதித் தோதிமி
தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை
தடமிட்டுப் பாவக்கார் கிரி
பொடிபட்டுப் போகச் சூரர்கள்
தலைஇற்றிட்டாடப் போர் புரிகின்ற வேலா
திகிரிப்பொன் பாணிப் பாலனை
மறை கல் புத்தேள்அப் பூமனை
சினமுற்றுச் சேடில் சாடிய ...... கந்தவேளே
தினையுற்றுக் காவல் காரியை
மணமுற்றுத் தேவப் பூவொடு
திகழ் கச்சித் தேவக்கோன் மகிழ் ...... தம்பிரானே.
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
மயலோதும் அந்த நிலையாலும் வஞ்ச
வசை பேசுகின்ற ...... மொழியாலும்
மறிபோல்உகின்ற விழிசேரும் அந்தி
மதிநேருகின்ற ...... நுதலாலும்
அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை ...... வளையாலும்
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து
அடியேன் மயங்கி ...... விடலாமோ
மயிலேறி அன்று நொடிபோதில் அண்டம்
வலமாக வந்த ...... குமரேசா
மறிதாவு செங்கை அரனார் இடங்கொள்
மலைமாது தந்த ...... முருகேசா
நயவான் உயர்ந்த மணிமாடம் உம்பர்
நடுவே நிறைந்த ...... மதிசூழ
நறைவீசு கும்ப குடமேவு கம்பை
நகர் மீதமர்ந்த ...... பெருமாளே.
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த ...... தனதான
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர்
முன்செமத்து மூர்க்கர் ...... வெகுபாவர்
முத்துதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள்கண்
முஞ்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே
எத்தர் குத்திரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்டம் உற்ற கூட்டர் ...... விலை மாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய்ப்புண்
இப்படிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ
தித்தி மித்தி மீத் தனத்த நத்த மூட்டு
சிற்றுடுக்கை சேட்டை ...... தவில்பேரி
திக்கு மக்கள்ஆக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்கடற்குள் ஆழ்த்து ...... விடும்வேலா
கற்புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா
கற்குறிச்சி வாழ்ப்பெண் ஒக்க வெற்றி வேல்கொள்
கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே.
திருப்பாடல் 36:
தந்த தாத்தன தன்ன தனந்தன
தத்தத் தத்தத் ...... தனதானா
வம்பறாச்சில கன்னமிடும்!சம
யத்துக் கத்துத் திரையாளர்
வன் கலாத்திரள் தன்னை அகன்று!ம
னத்தில் பற்றற்றருளாலே
தம் பராக்கற நின்னை !உணர்ந்துரு
கிப்பொற் பத்மக் கழல் சேர்வார்
தம்குழாத்தினில் என்னையும் அன்பொடு
வைக்கச் சற்றுக் கருதாதோ
வெம் பராக்ரம மின்அயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் திருமார்பா
கம்பராய்ப் பணி மன்னு புயம்!பெறு
கைக்குக் கற்புத் தவறாதே
கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் பெருமாளே.
திருப்பாடல் 37:
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன ...... தனதானா
வாய்ந்தப்பிடை நீடு குலாவிய
நீந்திப் பதுமாதியை மீதினில்
ஊர்ந்துற்பல ஓடையில் நீடிய ...... உகள்சேலை
வார்ந்துப் பகழீ எதிராகி மை
கூர்ந்துப் பரியா வரிசேர்அவை
சேர்ந்துக் குழையோடுசலாடிய ...... விழியாலே
சாய்ந்துப் பனை ஊண்அவரான பொல்
ஆய்ந்துப் பணினார்இரு தாளினில்
வீழ்ந்திப்படி மீதினிலே சிறிதறிவாலே
சாந்தப்பிய மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி வீணினிலே உயிர்
மாய்ந்திப்படி போகினும் ஓர்மொழி ...... மறவேனே
சார்ந்தப் பெருநீர் வெளமாகவெ
பாய்ந்தப்பொழுதாரும் இலாமலெ
காந்தப் பெரு நாதனுமாகிய ...... மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெணவென தாளம்
காந்தப் பதம் மாறி உலாவுயர்
ஆந்தன் குருநாதனும் ஆகியெ
போந்தப் பெருமான் முருகாஒரு ...... பெரியோனே
காந்தக்கலும் ஊசியுமே என
ஆய்ந்துத் தமிழோதிய சீர்பெறும்
காஞ்சிப்பதி மாநகர் மேவிய .....பெருமாளே.
(2023 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment