(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: காஞ்சிபுரம்
திருக்கோயில்: அருள்மிகு மேற்றளீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
காஞ்சீபுரத்தில் 5 திருப்புகழ் தலங்கள் அமைந்துள்ளன, அவை கச்சி ஏகம்பம் எனும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் (37 திருப்பாடல்கள்), கவுரிக் கோட்டம் எனும் அன்னை ஸ்ரீகாமாக்ஷி திருக்கோயில் (2 திருப்பாடல்கள்), குமாரக் கோட்டம் (2 திருப்பாடல்கள்), திருக்கச்சி மேற்றளி எனும் மேற்றளீஸ்வரர் திருக்கோயில் (1 திருப்பாடல்) மற்றும் கச்சிக் கச்சாலை எனும் கச்சபேஸ்வரர் திருக்கோயில் (2 திருப்பாடல்கள்)
சிவபெருமான் இங்கு இரு திருச்சன்னிதிகளில் இருவேறு திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றார், ஆதி மூலவர் மேற்றளீஸ்வரர், மற்றொரு திருச்சன்னிதியில் எழுந்தருளியுள்ள 'ஓத உருகீசர்' தற்பொழுது பிரசித்தமாய் போற்றப் பெற்று வருகின்றார். ஞானசம்பந்த மூர்த்தி இத்தலத்திற்கு வருகை புரிந்து பாடுகையில், பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு, முன்னர் சிவமூர்த்தி அருளியிருந்த வண்ணம், தன் திருமேனி முழுவதும் உருகியவராய் ஓத உருகீசரோடு கலந்து சிவ சாரூபம் பெற்றதாக, சிவஞான முனிவர் அருளியுள்ள காஞ்சிப் புராணத்தின் திருமேற்றளிப் படலம் பதிவு செய்கின்றது (எனினும் சீர்காழிச் செல்வரின் இத்தலத்திற்கான திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை).
'புகலும் கொண்டற்குச் சித்தியளிக்கும் பெருமாளே' எனும் இத்தலத்திற்கான திருப்புகழ் திருப்பாடல் வரி தலபுராண நிகழ்வோடு பொருந்துவதாய் அமைந்துள்ளது ('கொண்டல்' என்பது கொண்டல் வண்ணரான ஸ்ரீமகாவிஷ்ணுவைக் குறிக்க வந்தது).
அப்பர் சுவாமிகளும் சுந்தரரும் ஓரோர் திருப்பதிகத்தினை அருளிச் செய்துள்ளனர். ஆலயத்திற்கு நேரெதிரே, திருவீதியின் துவக்கத்தில் திருஞானசம்பந்தர் சிறிய தனிக்கோயிலில் இரு கரங்களும் கூப்பிய திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார்.
திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் ஆலயவாயின் வலது புறத்திலும், ஓத உருகீசர் திருச்சன்னிதியின் வெளிப்பிரகாரத்திலும் 'மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில்' அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கென ஒரு திருப்பாடலை அருளியுள்ளார்,
சென்னையிலிருந்து 73 கி.மீ தூரத்திலும், செங்கல்பட்டிலிருந்து 40 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம்.
(Google Maps:
(Google Maps:
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
செறிதரும் செப்பத்துற்பல வெற்பும்
பிறிதும் அங்கத்தைக்குற்ற இருப்பும்
சிகரி துண்டிக்கக் கற்ற தனிச்செஞ் ...... சுடர்வேலும்
திரள்புயம் கொத்துப் பட்ட அனைத்தும்
தெளிய நெஞ்சத் துப்புற்று மயக்கம்
திகழ் ப்ரபஞ்சத்தைப் புற்புதம்ஒக்கும் ...... படிநாடும்
அறிவறிந்தத்தற் கற்றது செப்பும்
கடவுளன் பத்தர்க்கச்சம் !அறுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமான்!என்
றவிழும்அன்புற்றுக் கற்று மனத்தின்
செயலொழிந்தெட்டப் பட்டதனைச்!சென்
றடைதரும் பக்வத்தைத் தமியெற்கென்றருள்வாயே
குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும்
பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்
குலைகுலைந்துட்கக் சத்ய மிழற்றும் ...... சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமுரைக்கும்
கனகன்அங்கத்தில் குத்திநிணச் செங்
குடர்பிடுங்கித் திக்குற்ற முகச்சிங்க முராரி
பொறிவிடும் துத்திக் கட்செவியிற்கண்
துயில்கொளும் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன் ...... ஜகதாதை
புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன்
பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண்
புகலும் கொண்டற்குச் சித்தியளிக்கும் ...... பெருமாளே.
(2021 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment