Tuesday, December 25, 2018

திருவான்மியூர்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: சென்னை

திருக்கோயில்: அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

சென்னை அடையாருக்கு அருகில் அமைந்துள்ளது மிகப் பிரசித்தமான தலமான திருவான்மியூர், திரேதா யுக காலத்தினரான, இராமாயண இதிகாசம் இயற்றிய வால்மீகி முனிவர் பூசித்து அருள் பெற்ற தலம், ஆதலின் இத்தலத்தின் தொன்மையை எண்ணி வியக்கின்றோம். ஞான சம்பந்த மூர்த்தி மற்றும் நாவுக்கரசு சுவாமிகளின்  தேவாரப் பாடல் பெற்ற சிறப்புப் பொருந்தியது.  
-
(ஞானசம்பந்தர் தேவாரம்):
விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய் உமைநங்கையொர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மியூர் உறையும்
அரையா உன்னையல்லால் அடையாதெனது ஆதரவே!!  .

சென்ற ஆண்டு குடமுழுக்கு கண்டு புதுப்பொலிவுடன் திருக்கோயில் மிளிர்கின்றது. பிரமாண்டமான ஆலய வளாகம், வழி தோறுமுள்ள மண்டபங்களின் மேற்புறத்தில் வரையப் பெற்றுள்ள தெய்வீகத் திருக்காட்சிகளைத் தரிசித்தவாறே இறுதி வாயிலைக் கடந்து செல்கின்றோம், முதன்முதலில் நம் கண் முன்னே தெரிவது திருப்புகழ் தெய்வமான முருகக் கடவுளின் திருச்சன்னிதி, ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரியார் இம்மூர்த்திக்கு ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார்.

மூலக் கருவறையில் ஆதிப்பரம்பொருளான மருந்தீஸ்வர மூர்த்தி ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை தனிக்கோயிலில் திரிபுர சுந்தரியாய், அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் எழுந்தருளி இருக்கின்றாள், ஆச்சரியத் திருக்கோலம். பன்முறை தரிசித்துப் போற்றிப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.

(Google Maps: Arulmigu Sri Marundeeswarar Temple, 8, W Tank St, Lalitha Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதான தானதன தனதான தானதன
     தனதான தானதன ...... தனதான

குசமாகி யாருமலை மரைமாநு நூலினிடை
     குடிலான ஆல்வயிறு ...... குழையூடே

குறிபோகு மீனவிழி மதிமா முகாருமலர்
     குழல்கார்அதான குணமிலி மாதர்

புசவாசையால் மனது உனை நாடிடாதபடி
     புலையேன் உலாவிமிகு ...... புணர்வாகிப்

புகழான பூமிமிசை மடிவாய் இறாதவகை
     பொலிவான பாதமலர் ...... அருள்வாயே

நிசநாரணாதி திரு மருகா உலாசமிகு
     நிகழ்போதமான பர ...... முருகோனே

நிதிஞான போதம்அரன் இருகாதிலேஉதவு
     நிபுணா நிசாசரர்கள் ...... குலகாலா

திசைமா முகாழிஅரி மகவான் முனோர்கள்பணி
     சிவநாதர்ஆலமயில் ...... அமுதேசர்

திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
     திருவான்மியூர் மருவு ...... பெருமாளே.

(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment