(தணிகைமணி திரு.வி.எஸ். செங்கல்வராயப் பிள்ளை அவர்கள்)
மேற்குறித்துள்ள ஆய்வுகளை முதற்குறிப்பாகக் கொண்டு, திருப்புகழ் தலங்களுக்கான ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டு தம்முடைய அரிய பெரிய பிரயத்தனத்தினால், கண்டறியப் படாதிருந்த எண்ணிறந்த திருப்புகழ் தலங்களை ஆய்ந்தறிந்து வெளிக்கொணர்ந்த பெருமை திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களையும் அவர்தம் தமையனார் திரு.ராமசேஷன் அவர்களையுமே சாரும். இப்பெருமக்கள் எழுதி வெளியிட்டுள்ள 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் நூலே 'திருப்புகழ் தலங்களுக்கான பிரமாண நூலாக' விளங்குகின்றது, இந்நூலுக்கு திருமுருக.வாரியார் சுவாமிகளும், திரு. கி.வா. ஜகந்நாதன் அவர்களும் அணிந்துரை எழுதி ஆசி கூறியுள்ளனர்.
திரு.வலையப்பேட்டை ரா கிருஷ்ணன் அவர்கள்
தற்பொழுதுள்ள இணைய தளங்களில் எண்ணிறந்த குறைபாடுகள் காணப் பெறுகின்றன. திருப்புகழ் தலங்கள் அல்லாதவற்றைத் திருப்புகழ் தலங்களாகக் குறிப்பது, மாவட்டங்களைத் தவறாகக் குறிப்பது, தலப் பெயர்களை மட்டுமே குறித்து அத்தலத்திலுள்ள திருப்புகழ் திருக்கோயில் எதுவென்று தெரிவிக்காமல் விடுப்பது, செவிவழிச் செய்திகளை வைத்துத் தாமாகவே ஒரு தலத்தினைத் திருப்புகழ் தலமாக முன்மொழிவது, அமைவிடத்தைத் தெளிவு பட விளக்காமல் பிற தகவல்களுக்காக ஏராளமான வரிகளை விரயம் செய்வது, எளிதாக பயன்படுத்தும் வகையில் தொகுக்காதது என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.பல வருடங்களாக அடியேனுக்கு, திருப்புகழ் தலங்களைத் தேவாரத் தலங்களைப் போன்றே 'தொண்டை நாடு; சோழ நாடு - காவிரி தென்கரை மற்றும் வடகரை; நடு நாடு; பாண்டிய நாடு; கொங்கு நாடு; ஈழ நாடு; துளுவ நாடு; மலை நாடு; ஈழ நாடு' எனும் பிரிவுகளாக்கிப் பின் அவைகளை மாவட்ட வாரியாகவும் தொகுத்து, யாத்திரை மேற்கொள்வோர் எளிமையாகப் பயன்படுத்தும் வகையிலும், திருக்கோயில்களைத் துல்லியமான முறையில் சென்றடைவதற்கும், குறிப்பேடு போன்றதொரு வலைத்தளம் அமைக்க வேண்டும்' என்ற பெருவிருப்பம் இருந்து வந்தது.
பலமாத ஆய்வு மற்றும் தொகுத்தெழுதும் பணிக்குப் பின்னர் தற்பொழுது இம்முயற்சி முழு வடிவத்தினைப் பெற்றிருப்பதாக உணர்கின்றேன். 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் பிரமாண நூலை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கியுள்ள இவ்வலைத் தளத்தில் நேரடியாக பாடல் பெற்ற திருப்புகழ் தலங்கள் மட்டுமே தொகுக்கப் பட்டுள்ளது (வைப்புத் தலங்கள் இவற்றுள் சேராது).
ஒவ்வொரு தலத்திற்கான பக்கத்திலும் அத்தலத்திற்கான 'கூகுள் மேப்ஸின் நேரடி வழிகாட்டி' மற்றும் பாராயணம் புரிவதற்கு எளிதான வகையில்; சந்த ஓசை மாறாத வண்ணம் அத்தலத்தின் திருப்புகழ் திருப்பாடல்களையும் பிரித்துத் தொகுத்துள்ளேன்.
இத்தளத்தில் 206 திருப்புகழ் தலங்கள் இடம்பெறுகின்றன, அவற்றுள் 105 தலங்கள் 'தேவாரப் பாடல் பெற்றுள்ளவையாகவும் விளங்குகின்றன (சிவ சிவ).